ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் குறித்த பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை

09/12/2010 13:27

ஜெனீவா: ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையில் இரு நாட்களாக நடைபெற்ற பேச்சுகள் எவ்வித முன்னேற்றமுமின்றி முடிவடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், ஜேர்மன் மற்றும் சீனா போன்ற ஆறு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையிலான பேச்சுகள் அடுத்த மாத இறுதிக்குள் இஸ்தான்புல்லில் மீண்டும் நடைபெறவுள்ளதாக ஈரானிய தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாட்களாக ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுகளில் ஈரானின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பான சர்வதேசத்தின் கவலைகள் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு ஈரானை இணங்க வைப்பதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

ஆனால், தமது அணுநிகழ்ச்சித் திட்டம் மத்திய கிழக்கில் இராணுவ மோதல்களை உருவாக்கும் என்ற அச்சத்தையும் உலக பொருளாதாரத்தின் மீது கடுமையான தாக்கத்தைச் செலுத்துமென்ற வாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாதென ஈரான் தெரிவித்துள்ளது.

பரஸ்பர ஒத்துழைப்புகளின் அடிப்படையிலும் இரு தரப்பாலும் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் மட்டுமே ஈரான் பேச்சுகளைத் தொடருமென ஈரான் சார்பாக பேச்சுகளில் ஈடுபடும் தலைமையதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரானின் அணுவாயுத உரிமை குறித்தோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத அழுத்தங்கள் குறித்தோ தாம் பேச்சுகளில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர்  கூறியுள்ளார்.ரைம்ஸ் ஒவ் இந்தியா

thinakkural.com