உடலில் வெயில் பட்டால் புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்

10/09/2012 18:12

உடலில் வெயிலே படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

லண்டனில் புற்று நோய்களுக்கும், சூரிய ஒளிக்கும் உள்ள தொடர்பு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். 100 நாடுகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆய்வு முடிவுகள் சர்வதேச புற்றுநோய் இதழில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது: சூரியனின் புற ஊதாக்கதிர்களின் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டதில், சூரிய ஒளிக்கும், பல்வேறு வகை புற்று நோய்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் மார்பகம், கழுத்து, பெருங்குடல், உணவுக்குழல், இரைப்பை, நுரையீரல், நிணநீர் மண்டல உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் உள்பட ஏராளமான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது.

சூரிய ஒளி அதிகம் உடலில் படுபவர்கள் இவ்வகைப் புற்றுநோயால் இறப்பது மிகக்குறைவாகவே உள்ளது.

263 சீனப்பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு சூரிய ஒளி அதிகம் விழுவதால், புற்றுநோய் இறப்புவிகிதம் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 4.51 லட்சம் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் உடலில்படுவதன் மூலம் சிறுநீரகம், கழுத்து, புராஸ்டேட் உள்ளிட்ட புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மான்செஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் ஆன் வெப் தன் கட்டுரையில் கூறியிருப்பது: தற்காலச் சூழலில் பெரும்பாலானவர்கள் மூடிய அறைக்குள்ளேயே பணிபுரிவதால், அரிதாகவே சூரிய ஒளி உடலில் படுகிறது. இதனால் சில வகைப் புற்றுநோய்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

ஆனால் அதிகமாக வெயிலில் காய்வதன் மூலம் தோல் புற்றுநோய் ஏற்படக்கூடும். குறைவான சூரிய ஒளியால் ஏற்படும் ஆபத்தைக் காட்டிலும், திடீரென எரிக்கும் அளவுக்கு வெயிலில் காய்வது அதிக ஆபத்தை விளைவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார் ஆன் வெப்.

https://www.lankasritechnology.com/view.php?223009F220eZnBB34eeKOOldccbdQMAAcdddISMC6bbc4llOmae44dBnn20033990602