உயர்த்தப்பட்டன வரிகள்... தமிழக அரசுக்கு இனி ரூ.4,200 கோடி கூடுதல் வருவாய்!

12/07/2011 16:16

 

ருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பொருள்களுக்கும் மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்துள்ளது தமிழக அரசு. இதன் மூலம் அரசுக்கு ரூ 4200 கோடி வருவாய் கூடுதலாகக் கிடைக்கும்.

தமிழக அரசு வரிவருவாயைப் பெருக்கும் வகையில் சில பொருட்களுக்கு விற்பனை வரி, வாட் வரி விகிதங்களை உயர்த்தியும் மாற்றியும் அமைத்துள்ளது.

இதன் மூலம் இனி ரூ.3,900 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் தமிழகத்துக்கு கிடைக்கும். மேலும் பல்வேறு பதிவுக் கட்டணங்களை உயர்த்தியுள்ளதன் மூலம் மேலும் ரூ 300 கோடி, ஆக ரூ 4200 கோடி கிடைக்கும்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கடந்த ஆட்சியாளர்களால், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வைத்துவிட்டுச்செல்லப்பட்டுள்ளது. எனவே, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டி உள்ளது.

இதைக்கருத்தில் கொண்டு, அரசுக்கு வருவாயை பெருக்கும் வகையில் அரசுக்கு வருவாயை ஈட்டித்தரக்கூடிய விற்பனை வரியில் ஒரு சில பொருட்களுக்கான வரி விகிதம் மாற்றி அமைத்து அதன் மூலம் வரி வருவாயை உயர்த்தும் வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு கொண்டு வரும் வகையில் சில பொருட்களுக்கான மதிப்புக் கூட்டு வரி மற்றும் விற்பனை வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அறிவிக்கப்பட்டு பொருட்களுக்கும் பொருந்தும் வகையில், மதிப்புக்கூட்டு வரி (வாட்) 4 சதவீதம் என்பது 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

ஏற்கனவே கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்த மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேறு வழியின்றி தமிழ்நாட்டிலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உரம், பூச்சிகொல்லி மருந்துக்கு விலக்கு

விவசாயத்துக்கு முன்னுரிமை தரும் வகையில், விவசாயப்பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த 4 சதவீத மதிப்புக் கூட்டுவரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உரம், பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்டபொருட்களுக்கு மதிப்புக்கூட்டுவரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது 12.5 சதவீத மதிப்புக்கூட்டுவரி வசூலிக்கும் பொருட்களுக்கு, இனி மதிப்புக்கூட்டுவரி 14 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் ஏற்கனவே மதிப்புக்கூட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது. குஜராத்தில் 15 சதவீதம் வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக் கூட்டுவரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்த துணி வகைகளுக்கு 5 சதவீத வரிக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த வரிவிகிதம், ஆந்திராவில் ஏற்கனவே வரிவிதிப்புக்குள் கொண்டுவந்துவிட்டது.

கைத்தறித்துணிகளுக்கு, வழக்கம்போல் வரிவிலக்கு அமலில் இருக்கும்.

சமையல் எண்ணெய்க்கான வரிவிலக்கை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், ஆண்டு விற்பனை (டர்ன் ஓவர்) 500 கோடி ரூபாய் என்பதை 5 கோடி ரூபாயாக குறைக்கப்படுகிறது.

பீடி, சுருட்டுக்கு 20 சதவீதம் வரி

பீடி, புகையிலைப்பொருட்களுக்கு ஏற்கனவே மதிப்புக்கூட்டு வரிக்குள் வரவில்லை. இனி அது மதிப்புக்கூட்டு வரிக்குள் கொண்டுவரப்பட்டு 20 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படுகிறது.

புகையிலை, மூக்குப்பொடி, சுருட்டு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டுவந்த விற்பனை வரிவிலக்கு ரத்துசெய்யப்படுகிறது. இனி 20 சதவீத மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்படும்.

பீடி, பீடிக்கான புகையிலைக்கு 14.5 சதவீத மதிப்புக் கூட்டுவரி விதிக்கப்படுகிறது.

எல்.சி.டி.பேனல்ஸ், எல்.இ.டி.பேனல்ஸ், டிவிடிக்கள், சிடி, செல்போன், ஐ-பாடு, ஐ-போன்ஸ் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மொபைல் போன் போன்றவைகளுக்கு இப்போது 4 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது 14.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

ரூ.3900 கோடி

மாற்றப்பட்ட இந்த வரிவிதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக்களுக்கான பத்திரப்பதிவு, குத்தகை (லீஸ்) பவர் ஆப் அட்டர்னி, டெபாசிட் ஆப் டைட்டில் டீட் போன்றவற்றுக்கான பதிவுக்கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

thatstamil.com