உலகப்புகழ்பெற்ற முஸ்லிம் பல்கலையில் பதட்டம்: துணைவேந்தருக்கு எதிராக பழமைவாதிகள் போராட்டம்

29/01/2011 19:59

குஜராத்தில் முஸ்லிம்கள் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டப்படவில்லை' என்ற விமர்சனம் செய்த, உலகப்புகழ் பெற்ற, தாருல் உலூம் தியோ பந்த் முஸ்லிம் பல்கலையின் துணைவேந்தர் வஸ்தானிக்கு எதிராக பழமைவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி உடனடியாக ஆட்சி மன்ற குழுவை கூட்டவேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


உ.பி., மாநிலம், சகர்னாபூர் மாவட்டத்தில் தியோபந்த் நகரில், "தாருல் உலூம் தியோபந்த்' என்ற இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு முஸ்லிம் மத கோட்பாடுகள் கற்றுத்தரப்படுகிறது. இது ஆரம்பத்தில் , முஸ்லிம்களின் சன்னி பிரிவினரின் வழிபாடுகளை போதிக்கவும், அதற்கு உத்வேகம் கொடுக்கவும் புரட்சிகரமான அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டது. முகமது அலி ஜின்னா, இந்தியாவை பிரித்து இஸ்லாமிய நாடு அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தாருல் உலூம் பல்கலைக் கழகம். இங்கு படித்த மாணவர்கள் பலர், பாகிஸ்தானுக்கு சென்று தாருல் உலூம் கராச்சி என்ற பெயரில் கல்லூரிகளை துவக்கினர். தியோபந்த்தில் என்ன கற்றுக்கொடுக்கப்பட்டதோ அதை பாகிஸ்தானில் கற்றுக் கொடுத்தனர். ஆனால், பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இஸ்லாமிய பழமைவாதிகள் மதரசாக்களை தோற்றுவித்தனர். தலிபான்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக சென்றபோது, கடந்த 2008ம் ஆண்டு தாருல் உலூம் தியோபந்த் பல்கலை தனது பாதையை மாற்றிக் கொண்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான பாதையை கையாண்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக பத்வா பிறப்பித்தது. இஸ்லாமிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே இணைப்பு பாலத்தை ஏற்படுத்தும் வகையில் முக்கிய இஸ்லாமிய மையமாக தாருல் உலூம் பல்கலைக்கழகம் முக்கிய இடத்தை பெற்றது.


 

இப் பல்கலையில் தற்போது துணைவேந்தராக மவுலானா குலாம் முகமது வஸ்தான்வி நியமிக்கப்பட்டதும் பிரச்னை எழுந்தது. குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த இவர், தனது 18 வயதில் தாருல் உலூம் பல்கலையில் சேர்ந்து படித்தவர். தனது படிப்பு காலம் முடிந்ததும், மீண்டும் சூரத் சென்று பல்வேறு மதரசாக்களை துவக்கினார். எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் மதரசாக்களையும், கல்லூரிகளையும் துவக்கினார். தாருல் உலூம் பல்கலையில் படித்த பழைய மாணவர்களின் உதவியையும் பெற்றார். மருத்துவம் , இன்ஜினியரிங் உட்பட தொழிற்கல்வி படிப்புகளை ஏற்படுத்தினர். தியோபந்த்தில் உள்ள பல்கலைக்கு குஜராத்தில் இருந்து பழைய மாணவர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.


 

இந்நிலையில், தாருல் உலூம் பல்கலைக்கு துணைவேந்தரை நியமிக்க தேர்தல் நடந்தது. இதற்கு முன் துணைவேந்தராக இருந்த மவுலானா மார்க்குபூர் ரெஹ்மான், டிசம்பர் 8ம் தேதி காலமானார். அதை தொடர்ந்து, புதிய துணைவேந்தரை நியமிக்க ஆட்சி மன்ற குழு கூடியது. மொத்தமுள்ள 18 உறுப்பினர்களில் எட்டு பேர் மவுலானா குலாம் முகம்மது வஸ்தான்விக்கு ஆதரவு ஓட்டளித்தனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட மதானிக்கு நான்கு பேர் ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் வஸ்தான்வி துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். தாருல் உலூம் பல்கலையின் 145 ஆண்டு கால வரலாற்றில், குஜராத்தை சேர்ந்த ஒருவர் துணைவேந்தரானது இதுவே முதல்முறை. வஸ்தான்வி பதவியேற்றதும் அனைத்து தரப்பில் இருந்து அமோக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால், முஸ்லிம் உலமாக்களின் சில பிரிவினர் இடையே வஸ்தான்வி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வஸ்தாவி பொறுப்பு ஏற்றதும் பல வித மாற்றங்கள் பல்கலை யில் ஏற்படத்துவங்கியது. குறிப்பாக, ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் துறைகளை துவக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் தியோபந்தில் இன்ஜினியரிங் கல்லூரி துவங்குவது பற்றி ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் வஸ்தான்விக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மதானிக்கு ஆதரவாக செயல்பட்ட மாணவர்கள் 20 பேர், வஸ்தான்விக்கு எதிராக பிரசாரத்தில் இறங்கினர்.


 

"கடந்த 2002ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தை முஸ்லிம்கள் மறந்துவிட வேண்டும். குஜராத்தில் முஸ்லிம்கள் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டப்படவில்லை சிறப்பாக நடத்தப்படுகின்றனர்' என்று கூறிய வஸ்தான்வி பதவி விலக வேண்டும் என குரல் எழுப்பினர். குஜராத் முதல்வர் மோடிக்கு ஆதரவாக நற்சான்றிதழ் கொடுத்தவரை எப்படி துணைவேந்தராக நியமிக்கலாம் என குரல் எழுப்பினர். இந்த போராட்டம் கடந்த வாரம் தியோபந்த் பல்கலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஒன்பது மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால், கோபம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததை தொடர்ந்து சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இப்போது மாணவர்கள் வஸ்தானிக்கு எதிராக தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். வஸ்தானி தாமாக ராஜினாமா செய்யவேண்டும். அவரது ராஜினாமா குறித்து முடிவு செய்வதற்காக, ஆட்சி மன்ற குழுவை கூட்ட வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, ஆட்சிமன்ற குழுவை அடுத்த மாதம் 23ம் தேதி கூட்டுவதாக அறிவிக்கப்பட்டது.


 

இந்நிலையில், ஆட்சி மன்ற குழுவை பிப்ரவரி 23ம் தேதிக்கு முன்பாக கூட்ட வேண்டும் என்று கூறி, மாணவர்கள் அமைப்பின் தலைவர் மவுலபி சாத் ஜமில் பிஜ்னோரி கோரிக்கை விடுத்துள்ளார். ஆட்சி மன்ற குழுவை இரண்டொரு நாளில் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதற்கு இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் 23ம் தேதி தான் நடைபெறும் என, உதவி துணைவேந்தர் மவுலானா அப்துல் காலிக் மதராசி கூறியுள்ளார். உலகப்புகழ்பெற்ற தாருல் உலூம் முஸ்லிம் பல்கலையில் நவீன கல்வியை புகுத்தி, உலகத் தரத்திற்கு இணையாக மாற்றங்களை கொண்டுவர வஸ்தானி திட்டமிட்டார். இதை விரும்பாத பழமைவாத முஸ்லிம்கள், வஸ்தானி, நரேந்திர மோடியின் ஆதரவாளர், பாரதிய ஜனதா அனுதாபி என்று மாணவர்கள் மத்தியில் கருத்துக்களை பரப்பி எதிராக திசைதிருப்பிவிட்டுள்ளனர்.


 

- அர்ப்பித் பராசர், கட்டுரையாளர் "டெகல்கா டாட்காம்' இணைய தளத்தின் மூத்த நிருபர்.


தினமலர் 29-01-2011