ஊரைவிட்டு ஒதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

22/01/2011 19:17

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை போலீசார் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சிறுபோது இக்பால், சீனிமுகமது, பர்குருதீன், ரஷீத்கான் ஆகியோர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் ஊரில் உள்ள முஸ்லிம் சுன்னத் ஜமாத் நிர்வாகியாக கடந்த 23 ஆண்டுகளாக சீனிமுகமது பதவி வகித்து வந்தார். இந்நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்காரணமாக எங்கள் 4 பேரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஜமாத்திற்கு போகக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது என தடை விதித்துள்ளனர். புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: வழிபாட்டுத்தலங்களுக்கு வரக்கூடாது எனக்கூறுவது சட்டவிரோதமானது. ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். டிஎஸ்பி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மனுதாரர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாகிறது. மனுதாரர்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி அமைதியுடன் வாழ போலீசாரும், வருவாய்த்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினகரன் 22-1-2011