ஊழல் தான் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது - சோனியா காந்தி

28/11/2010 16:00

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும் போது ' ஊழல் தான் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. எனவே, ஊழலை காங்கிரசோ, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசோ சகித்துக் கொள்வதில்லை. எத்தகைய ஊழல் புகார்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஊழலற்ற ஆட்சி முறையை உருவாக்கவே பாடுபட்டு வருகிறோம். மன்மோகன் சிங், ஒரு நேர்மையான பிரதமர். அவரது நேர்மையை யாரும் கேள்வி கேட்டதில்லை. அவரது திறமையான தலைமையின் கீழ் நாடு வளர்ச்சி பாதையில் நடைபோடுகிறது. நாட்டின் முகமே மாறியிருக்கிறது. ஆனால் எங்கள் மீது குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளுக்கு இதே போல ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிச்சல் இல்லை. அவர்கள் ஊழல் விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள். அவர்கள் இரட்டை அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள்.

அப்படி செய்யாமல் மன்மோகன் சிங் போல, அவர்களும் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். நேர்மையான பாதையில் செல்வது எளிதானது அல்ல என்பதையும் நாங்கள் அறிவோம். ஆயினும் நேர்மையான நெறிமுறைகளை பின்பற்ற ஒவ்வொரு காங்கிரசாரும் உறுதி பூண்டுள்ளனர். வளர்ச்சி தான் காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டம். ஏழை மற்றும் நலிந்த பிரிவினரை தூக்கி விட பாடுபட்டு வருகிறோம்.அதற்காக ஏராளமான நலத்திட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றை மாநில அரசுகள் முறையாக அமுல்படுத்தினால் தான் உரியவர்களுக்கு பலன்கள் போய்ச் சேரும்.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிக்கு போதுமான நிதியை நாங்கள் ஒதுக்கினோம். ஆனாலும் அந்த மாநிலத்தில் மக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போராடுகிறார்கள். இந்த மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஊழல் தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இவற்றுக்கு எதிராக காங்கிரசார் போராட வேண்டும். அரசின் மக்கள் நலத்திட்டங்களில் ஊழல் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும்'. இவ்வாறு அவர் பேசினார். tamilmedia.com