என்கவுன்டர்களை விசாரிக்க தனி கமிஷன் கோரி மனு - லத்திகா சரன் விளக்கம்

03/10/2010 09:36

தவிர்க்க முடியாத காரணத்தாலேயே என்கவுன்ட்டர்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பீப்பிள்ஸ் வாட்ச் (Pepole's Watch) என்ற அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்றி டிபேன் என்பவர் தமிழகத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்  கமிஷன் அமைக்க வேண்டும் என்றும், என்கவுன்ட்டரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், என்கவுன்ட்டர் செய்த போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும் என்கவுன்ட்டர்களுக்காக போலீஸாருக்கு வழங்கப்பட்ட பதக்கங்களை, பணி உயர்வு போன்றவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இது குறித்து போலீஸ் டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

அதன்படி, போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதன் விவரம்:

என்கவுன்ட்டரில் அப்பாவிகள் உயிரிழந்து அதனால் மனுதாரர் ஆதங்கப்பட்டு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தால் அவருடைய உணர்வை புரிந்துக் கொள்ள முடியும். என்கவுன்ட்டரில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ரெளடிகள்.

அவர்கள் சட்டத்தின் ஆட்சிக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் சவால் விடுகின்ற அளவுக்கு குற்றச் செயல்கள் புரிந்துள்ளவர்கள்.

அத்தகையவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போலீஸார், ரெளடிகளிடம் இருந்து அப்பாவி பொதுமக்களைப் பாதுகாக்கவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டு என்கவுன்ட்டர் செய்ய வேண்டியுள்ளது. இல்லையென்றால், ரெளடிகளின் கையால் போலீஸார் இறக்க வேண்டியதுதான். யாரையும் வேண்டுமென்று, உள்நோக்கத்துடன் என்கவுன்ட்டர் செய்வதில்லை.

கடந்த சில ஆண்டுகளில் குற்றச்செயல்களும், தீவிரவாதமும் அதிகரித்துள்ளன. தீவிரவாதத்தால் 7,000 மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். அதே போல், தமிழகத்தில் 500 கொலைகள் நிகழ்ந்துள்ளன.

ரெüடிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவிட்டால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.

மேலும், போலீஸ் நடவடிக்கையால் ஏதேனும் இறப்பு நிகழும்பட்சத்தில் அது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, உரிய விசாரணையும் நடத்தப்படுகிறது.

எந்த காவல்நிலைய மரணங்களையும் என்கவுன்ட்டர் கொலையாக மாற்றுவதில்லை. போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் ஒருவர் இறக்க நேரிடும்போது, குற்றம் செய்த அல்லது கவனக்குறைவாக இருந்த போலீசார் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகின்றன.

அதே போல், என்கவுன்ட்டர் செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு வழங்கப்படுகின்றன என்பது சரியல்ல.

தவறு செய்யும் போலீஸார் யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் நடவடிக்கை எடுக்கின்றன.

எனவே, மனுதாரர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு டி.ஜி.பி. லத்திகா சரண் கூறியுள்ளார்.

Dinamani