எம்.பி.க்களின் சம்பளம், அலவன்ஸ் ரூ.1 லட்சத்துக்கும் அதிகம்

24/08/2010 09:19

எம்.பி.க்களின் தொகுதி மற்றும் அலுவலக அலவன்ஸ் மேலும் 10,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.பி.,க்களுக்கு சம்பளம், அலவன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு லட்சத்து 40 ஆயிரமாக உயர்கிறது.

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டபின் கேபினட் செயலரின் சம்பளம் 80,000 ஆக உயர்ந்தது. சட்டம் இயற்றும் அதிகாரத்தில் உள்ள எம்.பி.க்களின் சம்பளம் அதை விட ஒரு ரூபாயாவது அதிகமாக இருக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், 16,000 ஆக இருந்த எம்.பி.க்களின் சம்பளத்தை 50,000 ஆக உயர்த்தவும், தொகுதி அலவன்ஸ் 20,000ல் இருந்து 40,000, அலுவலக அலவன்ஸ் 20,000ல் இருந்து 40,000 ஆக உயர்த்தவும் பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பா.ஜ, ஆர்.ஜே.டி., ஐக்கிய ஜனதா தளம் உட்பட எதிர்க்கட்சி தலைவர்களுடன் கடந்த சனிக்கிழமை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, எம்.பி.க்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முகர்ஜி உறுதி அளித்தார். அதன்பின், மக்களவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்தன. அதன்படி, எம்.பி.க்களின் அலுவலக அலவன்ஸ் 40,000ல் இருந்து இப்போது 45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தொகுதி அலவன்சும் 40,000ல் இருந்து 45,000 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் எம்.பி.க்களுக்கு மாதம் 10,000 கூடுதல் அலவன்ஸ் கிடைக்கும். இதற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அலவன்ஸ் உயர்த்துவதற்கான அனுமதி நேற்று வழங்கப்பட்டது. சொந்த வாகனங்கள் வாங்க வட்டியில்லா கடன் 1 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்ல ஒரு கி.மீ.க்கு அலவன்ஸ் 13ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய பயன்களும் 8,000ல் இருந்து 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், 50,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தில் மாற்றம் குறித்து மத்திய அரசு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.