எல்லாராலும் விரும்பப்படும் வாகிதுதீன் கான் : இவர், இப்படி...

07/09/2010 04:34

வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், "2009ம் ஆண்டில் சிறந்த முஸ்லிம்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. இதில், 500 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த பிரபல முஸ்லிம் அறிஞர் மவுலானா வாகிதுதீன் கான் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது தான், மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம்.

அந்த புத்தகத்தில், இஸ்லாம் ஆன்மிக தூதராக இவர் செயல்படுவதாகவும், இந்தியாவில், முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தினரால் மிகவும் விரும்பும் நபராகவும் இவரைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. அஹிம்சை வழியில் தான் வெற்றியை பெற முடியும் என்பது இவரது அசைக்க முடியாத கொள்கை. உலக அமைதிக்காக இவர் ஆற்றிய சேவையை பாராட்டி, ராஜிவ் தேசிய, "சத்பவனா' விருது சமீபத்தில் இவருக்கு வழங்கப்பட்டது. அணு ஆயுத குறைப்பு அமைப்பும், இவருக்கு அமைதிக்கான சர்வதேச விருதை வழங்கியுள்ளது. இது தவிர, மேலும் பல சர்வதேச, தேசிய அளவிலான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

உ.பி., மாநிலம் அஜாம்காரில் பிறந்த வாகிதுதீன், பாரம்பரிய முஸ்லிம் கல்வி நிலையத்தில் பயின்றவர். தன் இளமைப் பருவத்தின் பெரும்பாலான நாட்களை நூலகங்களிலேயே கழித்தார். நான்கு வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். தாயார் மற்றும் உறவினர் சுபி அப்துல் ஹமீத் கான் ஆகியோர் தான், வாகிதுதீன் கானின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்தனர். இஸ்லாமிய அறிஞர் என்பதோடு மட்டுமல்லாமல், எழுத்தாளர், இலக்கியவாதி, பேச்சாளர் என, இவருக்கு பன்முக அடையாளங்கள் உண்டு. வாகிதுதீன் கானின் குடும்பமே, இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற குடும்பம். இதன்காரணமாக, வாகிதுதீன் கானும் தேசியவாதியாக திகழ்ந்தார். பாரம்பரிய கல்வி மையத்தில் படித்தவுடன், தன் கல்வி பூர்த்தியாகி விட்டதாக கருதினார். ஆனால், பல தரப்பட்ட மக்களுடன் பேசிய பின்னரே, தான் கற்க வேண்டியது இன்னும் அதிகமாக உள்ளது என்பதை அவர் உணர்ந்தார்.

மக்கள் தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமெனில், இன்னும் அதிகமாக கற்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார். குறிப்பாக, ஆங்கிலம், நவீன அறிவியல் உள்ளிட்டவற்றையும் தெளிவாக கற்றபின்னரே, தன் கல்வித் தேவை பூர்த்தியாகும் என, கருதினார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், இரு மதத்துக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானபோது, அமைதியை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டதில் மவுலானா வாகிதுதீன் கானுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆச்சார்யா முனி சுஷில் குமார், சுவாமி சித்தானந்த் ஆகியோருடன் இணைந்து, 15 நாள் அமைதி யாத்திரையில் பங்கேற்றார். மும்பையிலிருந்து, நாக்பூர் வரை யாத்திரை மேற்கொண்டு, 35 இடங்களில், அமைதியை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினார்.

 Dinamlalar