ஏகத்துவம் என்றால் என்ன? (பாகம்-2)

10/10/2010 17:00

 ஏகத்துவம் என்றால் என்ன? (பாகம்-2)

அபூ அஸ்ஃபா, புதுவலசை.இன்

மக்கா காபிர்களின் செயல்கள் (மற்றும் யூத, கிருத்தவ, பாரசீக இணைவைப்பாளர்களின் செயல்கள்)

இன்று நம் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான செயல்கள் அந்த மக்கத்து காபிர்களின் செயல்களை ஒத்து இருப்பதை பார்க்கிறோம். மக்கத்து காபிர்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறானே அவர்களது கடவுள் கொள்கையையும் அல்லாஹ் குறிப்பிடுகிறான் பாருங்கள்.

 

'உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் 'அல்லாஹ்" என பதிலளிப்பார்கள் 'அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?" என்று நீர் கேட்பீராக. 10:31

 

'நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?" என்று அவர்கள் கூறினார்கள். (மேலும்) 'மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம் ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை" (என்றும் கூறுகின்றனர்). 23: 82-83

 

'நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?' என்று (நபியே!) நீர் கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கே" என்று அவர்கள் கூறுவார்கள் '(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?" என்று கூறுவீராக! 23: 84-85

 

'ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷ{க்கு இறைவனும் யார்?" என்றும் கேட்பீராக. 'அல்லாஹ்வே" என்று அவர்கள் சொல்வார்கள் '(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?" என்று கூறுவீராக! 23: 86-87

 

'எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் '(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ('உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. 23:88-89

 

மக்கா காபிர்கள் அல்லாஹ்வை எப்படி நம்பியிருந்தார்கள் என அல்லாஹ்வே கூறும் சான்றுகள் இவை. நாம், நம்முடைய நம்பிக்கையை ஒப்பிட்டுப் பார்க்க கூட முடியாத அளவுக்கு அவர்கள் அல்லஹ்வை நம்பியிருந்தார்கள். ஆனால் ஏன் அல்ல்லாஹ் காபிர்க்கள் என்று கூறுகிறான் 39:3

 

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், 'அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

 

10:18 தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள் இன்னும் அவர்கள், 'இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்பவை என்றும் கூறுகிறார்கள் அதற்கு நீர்; 'வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும்.

 

இன்றைய முஸ்லிம்கள் தர்ஹாக்களை நியாயப்படுத்த கூறிக்கொண்டிருக்கும் காரணங்கள்,

அவ்லியாக்கள் அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்பவர்கள், நமக்காக அல்லாஹ்விடத்தில் பரிந்து பேசுபவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அவர்களும் அதே காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

 

அது மட்டுமில்லாமல் அவர்களின் பெரும்பாலானோர் மரணத்திற்க்குப் பின் எழுப்பப்படுவோம் என்றும் மறுமை என்ற தீர்புநாள் உண்டு என்பதையும் ஏற்க்க மறுத்தார்கள். இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மறுமையை நம்பாதவர்களாக இருப்பதை பார்க்கிறோம், மறுமை விசயத்தில் பாராமுகமாக இருப்பதை பார்க்கிறோம்.

 

மேலும் கூறினார்கள்...

2:170 மேலும், 'அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் 'அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

 

5:104 'அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், 'எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)

 

இஸ்லாம் அல்லாஹ்வுடைய தூதரை மட்டுமே பின்பற்ற கட்டளையிடுகிறது. அதைவிட்டு முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்ற இந்த வாதங்களை எல்லாம் மக்கா காபிர்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். முஸ்லீம்களின் இச்செயல்களால் மிகப் பெரும் பாவத்தை அவர்கள் தேடிக்கொள்கின்றனர் ஏனெனில் அல்லாஹ் கூறினான்:

 

(இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக,) மறுமைநாளில் தங்கள் பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையால் இவர்கள் யார் யாரையெல்லாம் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களின் பாவங்களையும் சுமப்பார்கள். 16:25)

 

33:66 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், 'ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே. இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!"

 

என்று கூறுவார்கள். அந்த பெரியர்களாளும், இமாம்களாலும், தலைவர்களாளும் பாதிக்கப்பட்டு மறுமையில் வழிகெட்டுப் போனதை உணர்ந்தவர்கள் கூறுவார்களாம், மேலும் கூறுவார்களாம்...

 

'எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள். 'எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்). 33:67-68 

 

இந்த நிலையில் நம்மை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். அவ்லியாவும் வரமாட்டார், தலைவரும் வரமாட்டார், இமாமும் வரமாட்டார். (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்).

 

அல்லாஹ் தன்னை மட்டுமே வணங்கவேண்டும், தான் மட்டுமே சர்வ வல்லமையாளன், தன்னால் மட்டுமே அனைத்தையும் கேட்க முடியும், பார்க்க முடியும், தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும், தன்னால் மட்டுமே நிவாரணம் அளிக்க முடியும், தன்னால் மட்டுமே உணவளிக்க முடியும், குழந்தை தர முடியும் அதனால் மனிதன் தன்னை தனித்தவனாக நினைக்க வேண்டும் தன்னுடன் யாரையும் தனது பன்பால் கூட கர்ப்பனை செய்யக்கூடாது என நினைக்கிறான்.

 

ஸுரத்துல் இஃஹ்லாஸ் (ஏகத்துவம்)

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. 112:1-4

 

இஸ்லாம் முழுமையான மார்க்கம்

மதஹபுகள் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தர்க்கு பின் வந்தவை.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) உயிருடன் இருக்கும் போதே மார்கம் முழுமை அடைந்து விட்டது

 

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்¢ மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்¢ இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன் 5:3

 

(நபி(ஸல்) அரபா வெளியில் தனது இறுதிப்பேருரையின் போது) நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள். உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றிவிட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர். அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கித் தாழ்த்தியும் யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ர) நூல்: முஸ்ம் 2137

 

ஒன்றை நான் உங்களிடம் விடுகின்றேன். அதைப் பற்றிப் பிடிக்கின்ற வரை ஒருபோதும் நீங்கள் வழிகெட மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும் அவனது நபியின் வழிமுறையுமாகும். நூல்: ஹாகிம் 318 பாகம்: 1 பக்கம்: 171

இதைத்தான் இந்த மக்கள் மத்தியில் நாம் பிரச்சாரம் செய்கிறோம். இதில் சிலர் கேட்கிறார்கள் நீங்கள் எதையாவது பின்பற்றிவிட்டு போக வேண்டியது தானே மற்றவர்களுக்கு ஏன் சொல்கிறீர்கள், அல்லது மக்களுக்கு சென்னால் பிரச்சனை வருது, ஒற்றுமை கெடுது என்கின்றனர்.

 

நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல்

அல்லாஹ் கூறுகிறான்

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104

 

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள் (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள் தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். 3:110

 

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். நல்லதை(ச்செய்ய) ஏவுகிறார்கள். தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்;. இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள். 3:114

 

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக

இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள் தீயதை விட்டும் விலக்குகிறார்கள் தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள் (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள் அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 9:71

 

மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸ{ஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! 9:112

 

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள் தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் நல்ல வீடு இருக்கிறது. 13:22

 

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக்

கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள் ஜகாத்தும் கொடுப்பார்கள் நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள் தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. 22:41

 

இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள் மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள் நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள். 28:54

 

(லுக்மான் (அலை) கூறினார்கள்) - ''என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக, நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். 31:17

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வசனங்களிலும் தொடர்ந்து அல்லாஹ் இரண்டு செயல்களை வழியுறுத்துகிறான். மேலும் இதை செய்தால் கஷ்டங்கள் ஏற்படும் எனவும் அதை பொருத்துக் கொள்ள வேண்டும் எனவும் இந்த வசனங்கள் கூறுகிறது.

 

1. நன்மையானவற்றை மக்களுக்கு எடுத்துறைப்பது

நாம் நினைவு தெறிந்த காலத்திலிருந்து மக்களுக்கு நன்மையை ஏவிக்கொண்டு இருப்பவர்களை நாம் கண்டுகொண்டு இருக்கிறோம். பேஸ்இமாம்கள், தப்லீக் ஜமாத்தார்கள் போன்றோர் இதில் அடங்குவர். இவர்களில் நன்மை எதுவென்று தெறியாமலேயே மக்களுக்கு ஏவிக்கொண்டிருந்தவர்களும் உண்டு.

 

தெழுகை, நேன்பு, ஜக்காத், சதக்கா போன்ற நன்மைகளை ஏவினார்கள் இவை எல்லாம் மக்களை எந்ந அளவிற்கு இஸ்லாத்தின்பால் நாட்டமுல்ல மக்களாக அல்லது அல்லாஹ்வுக்கு கட்டுபட்டு நடக்கும் அடியார்களாக மாற்றியது என்றுபார்த்தால் மிகச்சிறிய அளவே எனலாம். ஜக்காத் கொடுக்க வேண்டும் என்றார்கள் கொடுத்துக் காட்டினார்களா? அதே போல் வரதட்சனைக்கு எதிராக, வட்டிக்கு எதிராக அவர்களின் குரலுக்கு மக்கள் செவிசாய்த்தார்களா? இன்னும் சுருக்கமாகச் சொன்னால் முஸ்லிம் என்று சொன்னால் தன்னுடைய மார்க்கத்தை பின்பற்றும் அளவிற்கேனும் தெறிந்திருந்தால்தான் நாம் முஸ்லிமாக வாழமுடியும். ஆனால் இஸ்லாம் என்றால் அர்த்தம் தெறியாத எத்தனையோ சகோதரர்கள் நம்மில் இருக்கிறார்கள். முஸ்லிம் என்றால் ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற கலிமாவை ஏற்றுக் கொண்டவனாவான். வணக்கத்திற்குறிய நாயன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை என்ற கலிமாவை ஏற்றுக் கொண்டவன் அல்லாஹ்வை வணங்குபவனாக இல்லை. முகம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய தூதர் என்று நம்பியவன் அல்லாஹ்வின் தூதரை தன் வாழ்க்கையின் வழிகாட்டியாக எடுத்துக் கௌ;ளவில்லை. கலிமாவை நடைமுறை படுத்துபவர்களாக இல்லை. ஜகாத் என்ற வணக்கமே நம்மில் இல்லாமல் மறைந்து விட்டதை பார்க்கிறோம்.

 

ஆனால் ஏகத்துவ எழுச்சி தமிழகத்தில் வேர் விட ஆரம்பித்தவுடன் இன்று நாம் நிலை என்ன? எப்படி மக்கள் இதைநோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்? சத்தியத்தை (நன்மையை) மக்களுக்கு எடுத்து வைத்தோம் தயவுதாட்சன்யமின்றி உள்ளதை உள்ளபடி எடுத்து வைத்தோம். இன்றைய சமுதாய மக்கள் இஸ்லாத்தை சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். தடம்மாறி சென்று கொண்டிருந்த நம் சமுதாய இளைஞர்கள் இஸ்லாமிய சிந்தனையாளர்களாக, அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட மக்களாக வாழ வழிதவகுத்தது இந்த ஏகத்துவ சிந்தனை. இவையெல்லாம் எப்படி சாத்தியம், நாம் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் என்ன? அல்லாஹ்வுடைய வேதமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் மட்டுமே. ஆதாரத்துடன் மக்களுக்கு எடுத்து வைத்ததின் விளைவு அல்லாஹ் மகத்தான வெற்றியை இந்த கொள்கைக்கு தந்து கொண்டு இருக்கிறான்.

 

2. மக்களிடம் நிலவும் தீமையை தடுத்தல்

இந்த இரண்டாவது செயலை நம்மைத்தவிர யாரும் செய்யவில்லை எனலாம். ஏனென்றால் இதில் தான் நாம் சில சோதனைகளை சந்திக்க நேரிடும். உண்மை என விழங்கியவர்கள் கூட தீமையை தடுக்க முன்வர மாட்டார்கள். உலக இலாபங்கள், நிர்பந்தங்கள், முன்னோரின் வழிமுறைகள், செந்த விருப்பு வெறுப்புகள் இவை எல்லாம் அவர்களை இக்காரியத்திலிருந்து தடுத்து விடுகிறது. எந்த ஒரு காரியத்தையும் செய் என்று சொல்வதைவிட செய்யாதே, இது தவறு எனும் போது மனிதன் என்ற முறையில் அனைவராலும் ஏற்றுக் கௌ;ள முடியாது. அதுவும் பல ஆண்டுகள் பழக்கம் என்றால் சொல்லவே வேண்டாம். நாம் விமர்சிக்கப் படுவது இந்த இரண்டாவது செயலால்தான். எத்தனையோ இயக்கங்கள் மக்கள் மத்தியில் பல கொள்கைகளை முன வைக்கிறார்கள் ஜிகாத் என்ற பெயராலும் ஒற்றுமை என்ற பெயராலும் ஆனால் மக்களால் அவர்களெல்லாம் விமர்சிக்கப் படுவதில்லை காரணம் அவர்களின் கூற்றில் உள்ள சூட்சமம் மக்களுக்கு தெறியாது. நம்மை, நம்முடைய கொள்கையை எதிர்க்கவில்லை என்ற அடிப்படையில் தான் பார்க்கப் படுகிறார்கள்.

 

ஆனால் அல்லாஹ்வோ நன்மையை மட்டும் ஏவு என்று சொல்லாமல் தீமையை தடு என்றும் கட்டளையிடுகிறான். இதைத்தான் நபிமார்களும் செய்தார்கள் அதனால்தான் அவர்களை மக்கள் புறக்கணித்தார்கள், கொலைகூட செய்தார்கள் அப்படிப்பட்ட பணியை (தீமைகளை) வீரியத்துடன் எதிர்த்து இன்று அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்…

 

மக்கள் செய்து கொண்டிருப்பதை தவறு என்று ஆதாரத்துடன் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

அல்லாஹ்வுடைய வேதத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் வேறு யாரையும் எதையும் பின்பற்றக் கூடாது. அல்லாஹ்வோ அல்லாஹ்வுடைய ரசூலோ சொல்லாத, செய்யாத அல்லது அவர்களால் அவர்கள் காலத்தில் அங்கீகரிக்கப்படாதவை மார்கம் இல்லை.

 

நம் வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் சிறிய அளவில் கூட இணைவைத்தலை தவிர்ந்து கௌள வேண்டும். அது மிகப்பெரிய பாவம்.

 

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான். இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். 4:48

 

(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும். இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது. 4:50

இந்தப் பாவத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்தத் தீமைகளை மக்கள் மத்தியில் பகிரங்கமாகத் தடுக்கவேண்டும்.

 

குற்றத்தைக் கண்டால் தடுக்க்க வேண்டும்

2:65 உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி 'சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.

 

7:163 (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.

 

7:164 (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், 'அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள் அதற்கு (அந்த நல்லடியார்கள்): 'எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்."

 

7:165 அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம் வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.

 

7:166 தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, 'நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகிவிடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.

 

7:167 (நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன்

 

அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

 

இந்தச்சம்பவத்தில் அல்லாஹ் மூன்று சாராரைப்பற்றி குறிப்பிடுகிறான்.

1. சனிக்கிழமை மீன்பிடித்து வரம்பு மீறியவர்கள்

2. வரம்பு மீறியோரை தடுத்து நல்லுபதேசம் செய்தவர்கள்

3. நல்லுபதேசம் செய்தவர்களை தடுத்து அல்லாஹ் வேதனை செய்ய நாடியோருக்கு ஏன்

உபதேசம் செய்கிறீர்கள் என்றவர்கள்.

இந்த மூன்று பிரிவினரில் அல்லாஹ் யாரை காப்பாற்றியதாக குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்து புறக்கணித்தவர்களை தடுத்தார்களே அவர்களை மட்டும்

காப்பாற்றினான்.

முதலாம் பிரிவினர் வரம்பு மீறினார்கள் அல்லாஹ் தண்டித்தான்.

மூன்றாம் பிரிவினரை அல்லாஹ் ஏன் தண்டித்தான்? இவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை உணர்ந்திருந்தும் தடுக்க வில்லை. தடுத்தவர்களை தடுத்தார்கள். ஆகையால் அல்லாஹ் இருபிரிவினரையும் இங்கு தண்டித்ததகக் கூறுகிறான்.

இதில் காப்பாற்றப் பட்டார்களே அவர்கள் கூறியதைப் பாருங்கள்..

ஏன் உபதேசம் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு நமது பதிலும் இதுதான்.

1. நம்மீது நன்மையை ஏவி தீமையை தடுக்கும் படியான அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ் நம்மீது சுமத்திய பொறுப்பிலிருந்து நீங்கிக் கொள்ள, அவனது கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ள.

2. நமது உபதேசத்தின் மூலம் தவறு செய்பவர்கள் தவறிலிருந்து விளகிக் கௌ்ளலாம் அல்லவா அதர்க்காக.

இதுதான் முழுமையான ஏகத்துவத்தின் அளவுகோள். அந்த அளவுகோளின் அடிப்படையில் தான் நாம் ஏகத்துவ பிரச்சாரம் செய்து வருகிறோம். அனைவருக்கும் இறைவன் ஒருவனே, தூதர் ஒருவரே, வேதம் ஒன்றே அந்த வேதத்தின் பக்கம் வாருங்கள், அந்த தூதரின் மார்கத்தை பின்பற்றுங்கள், பல வழிகளை பின்பற்றாதீர்கள். மார்க்க விசயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.

திருறைக் குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் பின்பற்றுவோம் வேரைதையும் யாரையும் பின்பற்றக் கூடாது என்று மக்களை ஏகத்துவத்தின்பால் அழைத்துக் கொண்டிருக்கிறோம். கருத்து முரண்பாடு ஏற்படுகிறதா அதை அல்லாஹ் எப்படி தீர்த்துக்கொள்ளச் சொல்கிறானோ அதன்படி மக்களை அழைக்கிறோம்.

 

அல்லாஹ் கூறுகிறான் ..

நம்பிக்கை கொண்டோரே.. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள், அவனது தூதருக்குக் கட்டுப்படுங்கள், உங்களின் அதிகாரம் உடையோருக்கு (ஆட்சியாளர்) கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விசயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் கொண்டு செல்லுங்கள் (குர்ஆன், ஹதீஸ்) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் இதுவே சிறந்ததும் அழகிய விளக்கமுமாகும். 4:59

 

அல்ல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வ்வழி காட்டுவானாக…

அல்ஹம்துலில்ல்லாஹி ரப்ப்பில் ஆலமீன்

அன்புடன் அபூ அஸ்ஃப, புதுவலசை.இன்