ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் அதிகாரிகள் திடீர் சோதனை

31/08/2010 10:15

ராமநாதபுரம், ஆக. 29:  ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் மனநிலை பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 4 பேர் பிடிக்கப்பட்டனர்.

ஏர்வாடி காட்டுப்பள்ளி தர்காவில் பரமக்குடி வருவாய்க் கோட்டாட்சியர் சாத்தையா, கடலாடி வட்டாட்சியர் காளிமுத்து, சுகாதாரத்துறை துணை இயக்குநர் உமா மகேசுவரி,மனநல மருத்துவர் பெரியார் லெனின்,ராமநாதபுரம் டி.எஸ்.பி. கணேசன்,போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கதுரை(ஏர்வாடி), சங்கு(கீழக்கரை) மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸôர் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், அடையாளம் தெரியாத இரு பெண் மனநோயாளிகள் உள்பட 4 பேர் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சங்கு கூறுகையில், பிடிபட்ட மனநோயாளிகளுக்கு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து, ஏர்வாடி நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் கரீம்கனி கூறுகையில், ஏர்வாடியில் திடீர் சோதனை நடத்தும் அதிகாரிகள், உளவுப்பிரிவு போலீஸýக்கு முன்கூட்டியே தெரிவித்து ஆய்வு செய்தால், மேலும் பலர் சிக்குவர். இவர்களால்  ஏர்வாடிக்கு அவப் பெயர் வருகிறது.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஏர்வாடியில் மனநலக் காப்பகம் அமைக்க வேண்டும். இக்காப்பகத்தை அமைக்கத் தேவையான இடத்தை இலவசமாக வழங்க சிலர் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடலாடி வட்டாட்சியர் காளிமுத்து கூறுகையில், காட்டுப்பள்ளி தர்காவில் மனநோயாளிகள் யாரையும் கட்டி வைத்து இருக்கிறார்களா என ஆய்வு நடத்தப்பட்டது. நோயாளிகள் யாரையாவது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்  தெரிவித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி