ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினரானது இந்தியா

13/10/2010 14:34

ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் மொத்தமுள்ள 15 இடங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் மட்டுமே நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மற்ற 10 நாடுகள் இரண்டு ஆண்டு கால சுழற்சி முறையில் இந்த சபையில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த சபையில் நிரந்தர அந்தஸ்து கேட்டு பிரேசில், ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சபையில் இந்தியா மீண்டும் தற்காலிக உறுப்பு நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளின் சார்பில் கஜகஸ்தானும், இந்தியாவும் இந்த முறை போட்டியிட்டன. ஆனால், இந்த ஆண்டு துவக்கத்தில் கஜகஸ்தான் இந்த போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால் இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 191 உறுப்பு நாடுகளில், 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன.

ஆப்ரிக்கா நாடுகளின் சார்பில் தென் ஆப்ரிக்காவும், தென் அமெரிக்க நாடுகளின் சார்பில் கொலம்பியாவும், ஐரோப்பிய நாடுகளின் சார்பில் ஜெர்மனியும், போர்ச்சுகலும் தேர்வாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இரண்டு ஆண்டு காலத்துக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக இருக்கும். கடந்த 92ம் ஆண்டு முன்பு இந்தியா ஆறு முறை ஐ.நா.,பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக இருந்துள்ளது. அதன் பிறகு ஜப்பான் போட்டிக்கு வந்ததால் இந்தியாவால் பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக முடியாமல் இருந்தது. இந்தியாவுக்கான ஐ.நா., தூதர் ஹர்தீப்சிங் பூரி குறிப்பிடுகையில், " ஐ.நா., உறுப்பு நாடுகளின் ஒவ்வொரு ஓட்டையும் இந்தியாவுக்கு ஆதரவாக பெறுவதற்கு கடுமையாக உழைத்தோம்' என்றார்.

Dinamalar