ஐரோப்பாவைத் தாக்குவோம் - கடாபி எச்சரிக்கை

03/07/2011 09:52

 

லிபியா மீதான நேட்டோப் படைகளின் தாக்குதலுக்குப் பழிவாங்க ஐரோப்பாவைத் தாக்குவோம் என்று எச்சரித்துள்ளார் லிபிய அதிபர் கடாபி. ஐரோப்பாவில் உள்ள அலுவலகங்கள், வீடுகள், குடும்பங்கள் என்று அனைத்தும் லிபியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று கூறியுள்ளார் கடாபி. எனினும், இதனைக் கண்டுகொள்ளாத அமெரிக்கா, கடாபி இதுபோன்று பயமுறுத்துவதை விடுத்துப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ளது.

கடந்த பல மாதங்களாக லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் அதிபர் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோப் படைகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக அதிபர் கடாபியைக் கொல்லும் நோக்கத்துடன் அவருடைய மாளிகையைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன நேட்டோப் படைகள். அதில் சில வாரங்களுக்கு முன்னர் கடாபியின் மகனும் பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டார்கள். சமீபத்தில் பேட்டியளித்த அமெரிக்க கடற்படைத் தளபதி, நேட்டோப் படைகளுக்கு கடாபியைக் கொல்லும் எண்ணம் உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இதுவரை நேட்டோ நாடுகளையும், அமெரிக்காவையும், கிளர்ச்சியாளர்களையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து வந்த கடாபி, தற்பொழுது முதல்முறையாக நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் வண்ணம் பேசி இருக்கிறார். லிபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் அதிபர் கடாபி. சமீபத்தில், அதிபர் கடாபி, அவரது மகன், லிபிய உளவுத்துறைத் தலைவர் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

பாரத் நியூஸ்.காம்