ஐ.நா. பதவியும்...இந்தியாவின் தகுதியும்!

04/12/2010 12:02

உலகத் தலைவர்களில் ஒருவராக இடம்பெறுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா முட்டி மோதிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார் என்பது குறித்தே உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கு தெரியவில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஆசியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், வேகமாக வளரும் நாடாக திகழ்வதாகவும், சர்வதேச பிரச்சனைகளில் தீர்மானிக்கிற சக்தியாக உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் இந்தியாவுக்கு வந்துவிட்டு போகும் பல உலக நாட்டு தலைவர்கள் புகழ்ந்துவிட்டு போவது உண்டு.ஏன் நமக்கு நாமே அவ்வாறு புகழ்ந்து கொள்வதும் உண்டு.

இந்நிலையில்தான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும், நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து இந்தியாவுக்கு தரப்பட வேண்டும் என்றெல்லாம் அண்மைக்காலமாக நமது நாட்டு தலைவர்கள் உலக நாட்டு தலைவர்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அவ்வளவு ஏன்? கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற தமது நாடு ஆதரிப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் ஒபாமா அவ்வாறு கூறியது வெறும் உதட்டளவில்தான் என்பது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக இந்தியா மேற்கொண்ட முயற்சியை அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கேலி செய்து பேசியதை வெளியிட்ட "விக்கிலீக்ஸ்" ஆவணங்கள் மூலம் தெரிந்துவிட்டது.

அமெரிக்காவின் இந்த பரிகாசம் ஒருபுறம் இருந்தாலும், உண்மையிலேயே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறக்கூடிய அளவுக்கு உலக அளவில் இந்தியாவை பிரபலமடையவைக்கவில்லை நம்மை ஆண்ட மற்றும் ஆண்டுக்கொண்டிருக்கிற தலைவர்கள் என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஏறக்குறைய பாதிபேர் (44 விழுக்காட்டினர்) இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார் என்றே தெரியாமல் இருப்பதும், மீதமுள்ளோர் பல பெயர்களை கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 110 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆகலாம் என்று 22 விழுக்காட்டினர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்; 27 விழுக்காட்டினர் அதனை ஏற்கவில்லை.

மீதமுள்ள பாதிக்கும் மேற்பட்டோருக்கு இந்தியா அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வது குறித்தோ, இந்திய அரசின் தலைமை பதவியில் யார் உள்ளனர் என்பது குறித்தோ எதுவுமே தெரியவில்லை.

குறிப்பாக ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் இந்த அறியாதோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அதே சமயம் ஆசியாவை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு இந்தியா அப்படி ஒரு முயற்சி (ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்) மேற்கோள்வதே தெரிந்திருக்கவில்லை.

அதே சமயம் சஹாரா ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க பிராந்தியம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் அல்லது வேண்டாம் என்ற தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் ஜி20 உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் சொல்லவே வேண்டாம்; மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதை கடுமையாக எதிர்த்துள்ளனர்.அதே சமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் ஆதரவு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக அளவில் இந்தியா குறித்து இந்த அளவிற்கு அறியப்படாமல் உள்ளதற்கு அதன் மென்மையான அணுகுமுறையும், அமைதியும்தான் காரணம் என்றும், இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்த விரும்பினால் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்திருப்பதாக கூறியுள்ளது இந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனம்!

இந்த ஆய்வு அறிக்கை உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கான தனது தகுதியை இந்தியா இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டியதுள்ளது போல! webdunia.com