ஒசாமா பின்லேடனின் அச்சுறுத்தலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது பிரான்ஸ்

30/10/2010 20:53

பாரிஸ்:பிரான்ஸ் பிரஜைகளைக் கொலை செய்யப்போவதாக அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் விடுத்திருந்த ஒலிநாடாச் செய்தியின் நம்பகத்தன்மையை பிரான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

 

பிரான்ஸுக்கெதிரான இப் பயங்கரவாத அச்சுறுத்தலின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் பேர்னாட் வலெரோ தெரிவித்துள்ளார்.

 

முஸ்லிம் பெண்கள் அணியும் நிஹாப் மற்றும் பர்காவுக்கு தடைவிதிக்கும் சட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் ஆப்கான் போருக்கு உதவி வருவது போன்ற நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் முகமாக பிரான்ஸ் பிரஜைகளைக் கொல்லப் போவதாக பின்லேடன் அச்சுறுத்தல் விடுத்திருந்த ஒலிநாடாவொன்றை அல்ஜசீரா தொலைக்காட்சி சேவை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்தது.

 

இவ்ஒலிநாடாவில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் ஆப்கானிஸ்தானிலுள்ள பிரான்ஸ் துருப்புக்கள் வாபஸ் பெறப்பட வேண்டுமெனவும் பின்லேடன் வலியுறுத்தியிருந்தார்.

 

இந்நிலையில் இச்செய்தி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரான்ஸின் உள்துறை அமைச்சர் பிரைஸ் ஹோர்ரெபியுக்ஸ்:

 

பிரான்ஸ் உண்மையான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.இதனால் முழுமையான விழிப்புணர்வு அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்