ஒசாமா-பின்-லேடன் - சில குறிப்புகள்

02/05/2011 11:27

54 நான்கு வயதான ஒசாமா-பின்-லேடன், சவூதி அரேபியாவில் பிறந்தவர். பிறவியிலேயே பெரும் பணக்காரர். ஐந்து முறைத் திருமணம் செய்து கொண்ட ஒசாமாவுக்கு சுமார் 23 குழந்தைகள் என்று கூறப்படுகிறது. எனினும், இவர்களில் பலர், இவரை விட்டு பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

பிறப்பால் சவூதி அரேபியாவைத் தாய்நாடாகக் கொண்டாலும், இஸ்லாம் மீது பற்று கொண்ட இவர், ஆப்கானிஸ்தானுக்கு வந்து சோவியத் யுனியனுடன் போரிடத் தொடங்கினார்.  அது அமெரிக்காவுக்கும், சோவியத் யுனியனுக்கும் இடையேயான  பனிப்போர் காலம் ஆதலால், அமெரிக்கா, ஒசாமா-பின்-லேடனுக்கு வேண்டிய உதவிகளை செய்தது. ஆயுதங்கள் வழங்குவது, பயிற்சி கொடுப்பது போன்ற உதவிகள், அமெரிக்காவிடம் இருந்து பெற்றுகொண்டார் ஒசாமா.

எனினும், பின்னர், அரபு நாடுகளில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதாகவும், அமெரிக்கா இஸ்லாம் மதத்தின் எதிரி என்றும் நினைத்த ஒசாமா, அமெரிக்காவை எதிர்க்கத் தொடங்கினார். இதனால், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான சவூதி இவருடைய குடிஉரிமையை ரத்து செய்தது, இதனால் அவர், ஆப்கானிஸ்தானிலேயே தஞ்சம் அடைந்தார். இவருடைய சகோரர்களில் பலரும் இவரைப் புறக்கணித்தனர்.

ஒசாமா, அமெரிக்காவை எதிர்க்கத் தொடங்கிய போது அமெரிக்கா அதனை அவ்வளவு 'சீரியஸ்' ஆக எடுத்துகொள்ளவில்லை. பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் தேதி, அமெரிக்காவில் சில விமானங்கள் கடத்தப்பட்டு, அவை நியூயார்க் நகரத்தில் இருந்த இரட்டை கோபுரங்கள் மீது மோதி தகர்க்கப்பட்டன. இதில் இரட்டை கோபுரங்கள் இரண்டும் தரைமட்டம் ஆயின. சுமார் 3000 பேர் இறந்தனர். மேலும், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல்களை திட்டமிட்டவர் ஒசாமா. அமெரிக்க உளவுத்துறை கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, மிகத்துல்லியமாக திட்டமிட்டு இந்தத் தாக்குதலை ஒசாமா நடத்தியதால், அதுவும் அமெரிக்க ராணுவத் தலைமையகத்தின் மீதே தாக்குதல் நடத்தியதால் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தார். இவரை, கண்டுபிடிக்க அமெரிக்க உளவுத்துறையில் ஒரு தனிக்குழுவே அமைக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த பத்து ஆண்டுகளாக ஒசாமவைத் தேடிவந்தது.

எனினும், அமெரிக்கப் படைகளின் தேடுதலில் கிடைக்காமல் மிக ஜாக்கிரதையாக இருந்து வந்தார். இதற்காக இவர் செல் போன், கம்ப்யூட்டர் போன்ற எந்த விதமான எலெக்ட்ரானிக் பொருட்களையும் பயன்படுத்தாமல் இருந்து வந்தார். முக்கிய தளபதிகள் தவிர வெளி ஆட்களையும் சந்திக்காமல் இருந்து வந்தார். தற்பொழுது, இவரை மிகசரியாக திட்டமிட்டு தாக்குதல் நடத்திக் கொன்று உள்ளது அமெரிக்கா. ஒசாமாவை உருவாக்கிய அமெரிக்காவே இப்பொழுது அவரை அழித்துள்ளது.

 

Bharathnewsonline.com

 

இஸ்லாம் வகுத்துள்ள புனிதப் போர் என்ற வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியவர் பின்லேடன் என்பது இஸ்லாமியர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

லேடன் கடந்த 1997-ம் ஆண்டு சிஎன்என்-க்கு கொடுத்த பேட்டின்போது கூறுகையில்,

அமெரிக்கா நம் நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள நினைக்கிறது, நமது வளங்களை கொள்ளையடிக்க நினைக்கிறது, அதன் ஏஜெண்டுகள் தான் நம்மை ஆள வேண்டும் என்று திட்டமிடுகிறது. இத்தனைக்கும் நம்மை சம்மதிக்க வைக்கப் பார்க்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், உடனே நம்மை தீவிரவாதிகள் என்று கூறுகிறது.

பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேல் குடியிருப்பு பகுதியில் கல் எறிந்தால் அவர்களை அமெரிக்கா தீவிரவாதிகள் என்கிறது. லெபனானில் உள்ள ஐ.நா கட்டிடத்தில் குழந்தைகளும், பெண்களும் இருக்கையில் இஸ்ரேல் அதை குண்டு வைத்து தகர்த்தால் அதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே சமயம் உரிமைக்காக குரல் கொடுக்கும் எந்த முஸ்லீமிற்கும் கண்டனம் தெரிவிக்கிறது. எங்கு பார்த்தாலும் அமெரிக்கா தான் தீவரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக இருக்கிறது என்றார்.

எப்படியோ, உலகையே ஆட்டிப் படைத்த மிகப் பெரிய நபராக மாறிப் போய் விட்டார் பின்லேடன். அவரது சகாப்தமும் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

 

Thatstamil