கஃபீல் முறைமையை (Sponsorship-kafeel system) கைவிடுகிறது குவைத்

27/09/2010 16:53

வெளிநாட்டுப் பணியாளர்களை மேலாதிக்கம் செய்யும் காப்பாளர் உரிமம்(Sponsorship-kafeel system) முறைமையை கைவிட குவைத் அரசு முன்வந்துள்ளது. இது அந்நாட்டில் பணிபுரியும் 2.3 மில்லியன் வெளிநாட்டுக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. இச்செய்தியை குவைத்தின் அல்-ராய் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

ஸ்பான்சர் ஸிஸ்ட்டம்(கஃபாலத்) என்று அழைக்கப்படும் முறைமைப் படி, குவைத்தில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டவர்களும், குவைத் குடிமகன்களின் - பணிமனை(அ) தொழில் உரிமையாளர்தம்- அனுமதியின் கீழ் அந்நாட்டில் வாழவேண்டியிருந்தது. இப்போது இந்த முறைமை கைவிடப்படுவதன் மூலம் வெளிநாட்டவர் யாரும், தாம் விரும்பும் பணியில் சேருவதற்கும், வணிக நடவடிக்கைகளுக்கு இனியொரு மண்ணின் மைந்தரைச் சாராதிருக்கவும் வழியேற்பட்டுள்ளது.

கஃபாலத் எனப்படும் மேலாதிக்க உரிமம் முறைமை மனித உரிமை அமைப்புகளின் கடும்கண்டனத்துக்கு ஆளாகி வந்ததும் குறிக்கத்தக்கது. இப்போதும் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனை அடுத்து இரண்டாவது நாடாக குவைத்தே இந்த கஃபாலத் கைவிடலை அறிவித்துள்ளது. 45ஆண்டுகளாக இருந்துவந்த குவைத் பணியாளர் நலச்சட்டம் நிறைய விமர்சனங்களுக்கு ஆட்பட்டதால் கடந்த ஆண்டு டிசம்பரில் பணியாளர் நலனை அதிகம் பேணும் வகையில் திருத்தப்பட்டிருந்தது. அதன்படி, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த வெளிநாட்டவர் வேறு பணிக்கு மேலாதிக்க உரிமத்தார் அனுமதியின்றியே மாறலாம் என்று விதி தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கஃபாலத் முறைமை முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டிருப்பதாக நேற்று அறிவித்துள்ள குவைத்தின் பணியாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் முஹம்மத் அல் அஃபாஸி, வெளிநாட்டுப் பணியாளர் நலவாரியம் என்கிற பொதுவான அமைப்பு நிறுவப்பட்டு எதிர்வரும் ஃபிப்ரவரி முதல் செயற்படத் தொடங்கும் என்று கூறினார்.

குவைத் விடுவிக்கப்பட்டதன் வருடாந்திரக் கொண்டாட்டத்தினையொட்டி,வெளிநாட்டுப் பணியாளார்களுக்கு இது குவைத் அரசு அளிக்கும் பரிசு என்றார் அஃபாஸி.

Inneram