கடலோர மாவட்டங்கள் தொடர்ந்து தத்தளிப்பு தமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும்

22/10/2012 09:33

சென்னை: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் மண்சரிவால்  பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத் தீவை ஒட்டிய அரபிக் கடல் பகுதிக்கு நேற்று மாலை நகர்ந்து சென்றது. இதையடுத்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குன்னூரில் 170 மிமீ: நேற்று அதிகபட்சமாக குன்னூர், கடலூர் ஆகிய இடங்களில் 170 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் நீலகிரி மலையில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும், நெய்வேலி 150 மிமீ, விழுப்புரம் 130 மிமீ, கேத்தி 110 மிமீ, மணிமுத்தாறு, சோழவரம் 100 மிமீ, பொன்னேரி, செங்குன்றம், பரங்கிப் பேட்டை, திருக்கோயிலூர், சிதம்பரம் 90 மிமீ, கோத்தகிரி 80 மிமீ, சிவகிரி, திண்டிவனம் 70 மிமீ, தேவக்கோட்டை, அண்ணா பல்கலைக் கழகம், உதகமண்டலம், சோளிங்கர், நன்னிலம், சேத்தியாதோப்பு 60 மிமீ, ஆரணி, தென்காசி, உதகமண்டலம், அறந்தாங்கி, கொடவாசல், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், புதுச்சேரி, செய்யாறு, காரைக்கால், ஆயக்குடி, செங்கல்பட்டு, கேளம்பாக்கம், கொள்ளிடம் 50 மிமீ மழை பெய்துள்ளது.  

கடலூர், நெய்வேலி, நீலகிரியில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.  விழுப்புரம் மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் பல இடங்களில் மண்சரிவால் மக்கள் வாழ்க்கை அடியோடு முடங்கியது. போக்குவரத்து பாதிப்பு: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன் தினம் காலை யில் தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. 26வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிந்தது. இதில் மரம் வேரோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூர-ஊட்டி, குன்னூர், எடக்காடு பகுதிக்கான வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோரகுந்தா மந்து பகுதியில் ராட்சத மரம் விழுந்து மஞ்சூர்&அப்பர்பவானி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிக்கட்டி&ஊட்டி சாலையில் எடக்காடு பாதகண்டி அருகே மண் திட்டு இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  கரியமலை பள்ளி கட்டிட தடுப்பு சுவர் இடிந்தது.தொட்டகம்பை பாரதி நகர், சேரனூரிலும் மண்சரிவு ஏற்பட்டது. நடுஹட்டி கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து மாடு இறந்தது. 

பெட்டட்டி அண்ணா நகரில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. கோத்தகிரி இந்திரா நகர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது.மேட்டுப்பாளையம்- குன்னூர் மலைப்பாதையில் குரும்பாடி, மரப்பாலம், காந்திபுரம், குன்னூர்-கோத்தகிரி சாலையிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இவற்றை தீயணைப்பு துறையினர் அகற்றினர். மேலூர், குன்னூர் பகுதியில் 9 வீடுகள் இடிந்து விழுந்தது. தொடர்ந்து பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மழை மீண்டும் தொடர்வதால் நிலச்சரிவு அபாயம் காணப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1173.70 மி.மீ மழையளவு பதிவானது.தஞ்சை: தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று 5வது நாளாக மழை பெய்தது. தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பிற்பகல் வரை தொடர்ந்து மழை பெய்தது. அதிகபட்சமாக அணைக்கரை, திருத்துறைபூண்டியில் 64 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மழையால் கடைமடை பகுதி விவசாய பணி சூடுபிடித்துள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 4 நாட்களாக தொடர்ந்து பெய்தது. 

மழைக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். 13 கால்நடைகள் இறந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை வெளுத்து கட்டியது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. கீழ்பெரும்பாக்கம் தரைபாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை- திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள பிள்ளையார்குப்பம் தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைபாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.மழை நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்: திருவாரூர் மாவட்டத்தில் இந்தாண்டு 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 60 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு, நடவு மூலம் 26,500 ஏக்கர் என ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 560 ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் முடிவுற்றுள்ளது.  கிராமப்புறங்களில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாததால் ஒரு நாள் பெய்த மழையை கூட தாங்க முடியாமல் நேரடி விதைப்பு சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

ரயில் பாதையில் மண்சரிவு
குன்னூர்-ஊட்டி வழித்தடத்தில் வெலிங்டன் உட்பட பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை ரயில்வே தொழிலாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். மதியம் 12.30 மணிக்குபின் பாதை சீரானதால் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் நேற்று மெதுவாக இயக்கப்பட்டது.