கட்சிகளின் கணக்கு தணிக்கை செய்து பகிரங்கமாக வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷன்

30/05/2011 09:51

 

தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்பதில், தேர்தல் கமிஷன் உறுதியாக இருப்பதால், அரசியல் கட்சிகள் எல்லாம் நிறுவனங்கள் போல மாற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் வரவு, செலவு கணக்குகளை பராமரித்து, அவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து பகிரங்கமாக வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன. தேர்தலில் கறுப்புப் பணப் புழக்கம் பெரும் பிரச்சினையாக உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களைப் பெறுவது, கடந்த சில இடைத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டதால், சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் கொமிஷன் பல கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், பணப்புழக்கம் பெருமளவில் கட்டுப்பட்டது.

 

வேட்பாளர் செலவுகள் குறித்த கணக்கு நடைமுறைகள், பிரச்சார செலவு என்று பலவகைகளில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்த கொமிஷன், தற்போது கட்சிகளுக்கு வரும் நிதி பற்றி அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்நிலையில், வரக்கூடிய தேர்தல்களிலும் கறுப்புப்பண புழக்கம் இருக்கக் கூடாது என்பதில், தேர்தல் கொமிஷன் உறுதியாக இருப்பதால், அரசியல் கட்சிகள் எல்லாம் நிறுவனங்கள் போல, வரவு, செலவு கணக்குகளை பராமரிப்பதோடு, ஆண்டுதோறும் அவற்றை தணிக்கை செய்து பகிரங்கமாக வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளன.

 

இதுதொடர்பாக தேர்தல் கொமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது, அரசியல் கட்சிகள் தங்களின் வரவு, செலவு கணக்குகளை பராமரிப்பது தொடர்பாக, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா சில பரிந்துரைகளை தேர்தல் கொமிஷனிடம் வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேர்தல் கொமிஷனில் பதிவு செய்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், வரவு, செலவுகளை கணக்குகளை பராமரிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் தங்களின் வரவு, செலவு கணக்குகளை பராமரிப்பதோடு, அவற்றை ஆடிட்டர்களைக் கொண்டு தணிக்கை செய்து, ஒவ்வொரு ஆண்டும், தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இதை கட்டாயமாக்கினால், தேர்தலில் கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கலாம்.

 

மார்ச் 31 ம் திகதியுடன் முடிவடையும் ஆண்டை, நிதியாண்டாக கணக்கில் கொண்டு, அரசியல் கட்சிகள் நிதி நிலை அறிக்கைகளை தயாரிக்க வேண்டும். கட்சிகள் தாலுகா, மாவட்டம் மற்றும் மாநில அளவில் கிளைகளைக் கொண்டிருந்தால், ஒவ்வொரு கிளைக்கும் தனியாக வரவு, செலவு கணக்கு தயாரிக்கப்பட்டு, பின்னர் அவை ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும். தேர்தல் கொமிஷனால் நியமிக்கப்படும் ஆடிட்டர்களே, அரசியல் கட்சிகள் தயாரித்து வழங்கும் வரவு, செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த ஆடிட்டர்கள் எல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நியமிக்கப்பட வேண்டும்.

 

தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு அறிக்கையை ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஆறு மாத காலத்திற்கு தங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதை பொதுமக்களும், மற்ற தரப்பினரும் பார்க்கலாம். அத்துடன் தணிக்கை செய்யப்பட்ட வருடாந்திர நிதி நிலை அறிக்கையை, ஆங்கிலத்தில் முன்னணி தேசிய நாளிதழ்களிலும், மாநிலங்களில் உள்ளூர் மொழியில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களிலும் வெளியிட வேண்டும்.

 

அரசியல் கட்சிகள் வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில், அவற்றுக்கு "பான்" நம்பரும் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளை விரைவில் பரிசீலிக்க உள்ள தேர்தல் கொமிஷன், அரசியல் கட்சிகளுக்கும், நிதி அமலாக்க நிறுவனங்களான வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினருக்கும் விரைவில் வழிகாட்டிக் குறிப்புகளை வழங்க உள்ளது. அந்த வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில், அவர்கள் செயல்படுவர்.

 

சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா தெரிவித்த யோசனையின் அடிப்படையில் தான், முன்னர் பீகார் சட்டசபை தேர்தலின் போதும், சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலின் போதும், தேர்தல் செலவு கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டு, தேர்தல் நடந்த மாநிலங்களில் ஏராளமான அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், பறிமுதல் செய்த பணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் மேல் நடவடிக்கைகளை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

newsonews.com