கரன்சி மதிப்பை குறைப்பதற்கு மன்மோகன் எதிர்ப்பு : தலைவர்கள் ஆதரவு

14/11/2010 15:13

 

ஏற்றுமதி சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க, கரன்சி மதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் சில நாடுகள் ஈடுபடுவது ஆபத்தானது; இது தடுத்த நிறுத்தப்பட வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இக்கருத்தையே மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களும் வலியுறுத்தினர்.

 

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வது, நாணய மதிப்பை நிர்ணயிப்பது தொடர்பாக அனைத்து நாடுகளின் ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் பொதுக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக சியோலில், "ஜி-20' மாநாடு கூட்டப்பட்டுள்ளது.பொருளாதார மந்தநிலையால், மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது அமெரிக்கா தான். அமெரிக்காவில் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வேலை வாய்ப்பை பெறவும் சீனா தனது கரன்சி மதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. சீனாவின் இம்முடிவு மற்றும் அமெரிக்க டாலரின் பலவீனம், பல நாடுகளுக்கு வர்த்தக சுமையாகிவிட்டது.சியோல் மாநாட்டில் தனக்கு சாதகமான விஷயங்களை பெறுவதற்காக, அமெரிக்க அதிபர் ஒபாமா முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சியோல் மாநாட்டையொட்டி, இந்தியா, இந்தோனேசியா உட்பட சில நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். தற்போது, "ஜி-20' மாநாட்டில் பங்கேற்றுள்ள சீனா, ஜெர்மனி உட்பட சில முக்கிய நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டு, அதற்கு ஏற்ப காய் நகர்த்தி வருகிறார்.சியோல் மாநாட்டிற்கு வரும் முன், அமெரிக்கா ஒரு கோரிக்கையை வைத்தது. "ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான பற்றாக்குறை அல்லது உபரி, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும்' என்று கூறியது.அமெரிக்கா தெரிவித்த யோசனையை, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் எதிர்த்தன. கரன்சி மதிப்பை நிர்ணயிப்பது தொடர்பாக ஒரு மித்த கருத்தை எட்டுவதில் தொடர்ந்து இழுபறி இருந்து வரும் நிலையில், நேற்று காலை துவங்கிய மாநாட்டில் சீன நடவடிக்கை, அமெரிக்கா தெரிவித்த ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டது.

 

மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஆணித்தரமாக தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

 

அவர் கூறியதாவது: உலகளவில் ஏற்றுமதி சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க, கரன்சி மதிப்பை குறைக்கும் நடவடிக்கையில் சில நாடுகள் ஈடுபடுவது ஆபத்தானது. இதை தடுத்து நிறுத்தி, அன்னிய செலாவணி சந்தையே, நாணய மதிப்பை நிர்ணயிக்கும்படி செய்ய வேண்டும். சில நாடுகள் நிர்ணயிப்பதை அனுமதிக்கக்கூடாது. சில நாடுகள் தங்கள் கரன்சி மதிப்பை குறைத்து, ஏற்றுமதி சந்தையில் சாதகமான நிலையைப் பெறுவது ஏற்புடையதல்ல. இது போன்ற தற்காப்புக் கொள்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அமெரிக்கா தெரிவித்துள்ளது போல், உச்ச வரம்பை குறுகிய கால அடிப்படையில் எந்த நாட்டாலும் தக்க வைக்க முடியாது. பல்வேறு நாடுகளுக்கு இடையேயுள்ள நிதிக் கொள்கை வேறுபாட்டால், நடைமுறைக்கு ஒத்து வராது.உலக பொருளாதார மந்த நிலைக்கு பின், அதையெல்லாம் சமாளித்து, நல்ல வளர்ச்சியை கண்டுள்ளோம். வரும் 2011-12ம் ஆண்டில் எங்கள் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னிய செலாவணியை அதிகளவில் உபரியாகக் கொண்டுள்ள நாடுகளுக்கு முக்கிய பொறுப்புகள் உள்ளன. வளர்ந்து வரும் நாடுகளுக்கு வரும் அன்னிய முதலீடு, உள்நாட்டு பொருளாதாரத்தையும், நீர்குமிழி போன்ற நிலைமையை ஏற்படுத்தாமல் நீண்ட கால நோக்கில் இருக்கும் வகையில் கட்டுமானத் திட்டங்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

 

மன்மோகன் சிங்கின் கருத்தை ஆதரித்து மற்ற நாட்டுத் தலைவர்களும் பேசினர். மாநாட்டின் நிறைவாக, அனைத்து தலைவர்களும் நாணய மதிப்பை குறைக்கும் போட்டி மனப்பான்மைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.கடைசியில் ஜி-20 நாடுகளின் தீர்மானத்தில், "கரன்சி மதிப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்' என்ற முடிவு ஏற்பட்டது. இதனால், சீனாவின் யுவான் கரன்சியை வேண்டுமென்றே மதிப்பு குறைவாக வைத்திருப்பதும், அதேபோல டாலர் பலவீனமாக இருப்பதும் போன்ற பாதிப்பிற்கு தற்போது ஒரு முடிவு காணப்பட்டது. சந்தை நிர்ணயிக்கும் அடிப்படையில் கரன்சி பரிவர்த்தனை இருக்கும் முடிவை தலைவர்கள் வற்புறுத்தியது, ஓரளவு வெற்றியாக முடிந்தது.

dinamalar.com