கருணை அடிப்படையிலான பணி நியமனம் குறித்து புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது

09/09/2010 10:52

கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது திருமணமாகாமல் இருந்து, பணி உத்தரவு வழங்கும் நேரத்தில் திருமணம் ஆகியிருந்தாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு வேலை அளிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.  

பணிக் காலத்தில் மரணமடையும் அரசு ஊழியர் குடும்பத்தில் வசித்து வரும் மகளுக்கும் மற்றும் அவ்வாறு வசித்து வரும் விதவை மகள் மற்றும் விவாகரத்துப் பெற்ற மகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன்பும், பின்பும்... இந்த நிலையில்,  மரணமடைந்த அரசு ஊழியர் குடும்பத்தில் உள்ள ஒரு பெண், அதாவது ஊழியரின் மகள் கருணை அடிப்படையில் அரசுப் பணி கோரலாம். அவ்வாறு கோரும் நேரத்தில் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். அரசின் பரிசீலனைகள் முடிந்து அவருக்கு பணி உத்தரவு வழங்கப்படும் நேரத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

அவ்வாறு குடும்ப பந்தத்துக்குள் நுழைந்த அந்த மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுவது கேள்விக் குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில், அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர் ராவ் வெளியிட்ட உத்தரவு:

ஒரு குடும்பத்தில் திருமணமாகாத நிலையில் உள்ள பெண்ணுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, அந்தக் குடும்பத்தில் உள்ள பிற வாரிசுதாரர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதற்கான சான்று அளிக்கப்பட வேண்டும். வேலைக்கான பரிசீலனை நடைபெறும் நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இருக்கலாம். அப்படி திருமணம் ஆன அந்தப் பெண்களுக்கு பணி அளிக்கப்படும் போது மீண்டும் மற்ற வாரிசுதாரர்களால் மறுப்பின்மைச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

திருமணம் செய்து கொண்ட பின்பு பணி வாய்ப்பு பெற்ற வாரிசு தனது பெற்றோரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் உறுதி ஆவணம் அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரியுள்ள நபரை திருமணம் செய்யும் நபர், வருங்காலத்தில் அவரது மனைவி அவருடைய பெற்றோருக்குச் செய்யும் உதவிக்கு மறுப்பு ஏதும் ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழியையும் அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani