துரத்தும் ஊழல் புகார்...துவளும் எடியூரப்பா! (Webdunia)

18/11/2010 14:51

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைத்து ஒரு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது அவர் மீது கூறப்படும் நில ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாற்றுக்கள் அவரை தூக்கம் இழக்கச் செய்துள்ளன.

ஒருபக்கம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை பிரதான எதிர்கட்சியான பா.ஜனதா, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வறுத்தெடுத்துக்கொண்டிருக்கையில், மறுபுறம் பா.ஜனதா முதல்வரான எடியூரப்பாவின் ஊழல் தகிடுதத்தங்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அக்கட்சி சுழற்றும் வாளின் முனையை மழுங்கச் செய்துகொண்டிருக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் குற்றச்சாற்றுக்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியினர் எடியூரப்பா மீதான குற்றச்சாற்றைக் கூறி, பா.ஜனதாவை வாயடைக்கச் செய்வதால், எடியூரப்பா மீது ஏக அதிருப்தியில் உள்ளது அக்கட்சி.

இருப்பினும் வெளிப்படையாக எடியூரப்பாவை விட்டுக்கொடுக்காமல் பா.ஜனதா தலைவர்கள் பேசி வருகின்றனர்.

சரி அப்படி என்ன பிரச்சனைகளில்தான் சிக்கியுள்ளார் எடியூரப்பா என்பதை பார்த்தால், விவகாரம் இடியாப்ப சிக்கலாக எழுந்து நிற்கிறது.

எடியூரப்பா மீது தற்போது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாற்றுக்களுமே எளிதில் தப்ப முடியாத அளவுக்கு உள்ளதாக கூறுகின்றனர் கர்நாடக அரசியல் நோக்கர்கள்!

எடியூரப்பா மீதான மூன்று குற்றச்சாற்றுக்களுமே நில ஒதுக்கீடு விவகாரம்தான்.

முதல் குற்றச்சாற்று, எடியூரப்பா தனது மகன்கள் இயக்குனராக உள்ள நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு செய்தது தொடர்பானது!

பெங்களூரில் உள்ள "புளுட்பவர் டெக்னாலாஜிஸ்" என்ற நிறுவனத்தில் எடியூரப்பாவின் மகன்களான ராகவேந்திரா மற்றும் விஜயேந்திரா ஆகிய இருவரும் இயக்குனர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனத்திற்கு, பெங்களூர் ஜிகானி முதல் பேஸ்பகுதியில் உள்ள கர்நாடகா தொழில் மேம்பாட்டுக்கழகத்துக்கு சொந்தமான அரசு நிலத்தில் 2 ஏக்கர், விதிகளை மீறி எடியூரப்பா தலையீட்டின் பேரில் 2 ஏக்கர் நிலம் அடிமாட்டு விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாவது குற்றச்சாற்றும் நில ஒதுக்கீடு விவகாரம்தான்! மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் எடியூரப்பா துணை முதல்வராக இருந்தபோது பெங்களூர் மேம்பாட்டுக் கழகத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக கூறி செல்வகுமார் என்பவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.ஆனால் 2006 ஆம் ஆண்டு செல்வகுமார் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், பா.ஜனதா தனித்தே ஆட்சியை பிடித்து எடியூரப்பா முதல்வரானதைத் தொடர்ந்து அவருக்கு செல்வகுமார் ஒரு கடிதம் எழுதினார். சர்ச்சைக்குரிய நிலத்தை தனக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று செல்வகுமாருக்கே அந்த நிலத்தை கொடுக்க எடியூரப்பா உத்தரவிட்டார். துணை முதல்வராக இருந்தபோது யாரிடம் இருந்து நிலத்தை பறித்தாரோ அவருக்கே முதல்வரானதும் நிலத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்ட விடயம் வெளியே தெரிந்ததும் சர்ச்சை எழுந்தது.

இதிலும் நிறைய விதிமீறில்கள் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

எடியூரப்பா மீது கூறப்படும் மூன்றாவது குற்றச்சாற்று, வீதிகளை மீறி தன் மகன் ராகவேந்திராவுக்கு வீடு கட்ட அரசு நிலத்தை ஒதுக்கி கொடுத்ததாகும். ராகவேந்திரா ஷிமோகா நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஆக உள்ளார்.

அவருக்கு ஏற்கனவே இரண்டு இடங்களில் வீடு உள்ளது. ஏற்கனவே நிலம் வைத்திருப்பவர்களுக்கு நாகசெட்டி ஹல்லி பகுதியில் உள்ள இடங்களை கொடுக்கக் கூடாது என்று அரசு விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது பற்றி நன்கு தெரிந்திருந்தும், எடியூரப்பா தன் மகனுக்காக விதிகளை மீறி நாகசெட்டி ஹல்லியில் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடும் போது இந்த வீடு வாங்கிய தகவலை ராகவேந்திரா மனுவில் குறிப்பிடவில்லை என்பதை தற்போது எதிர்கட்சியினர் தோண்டியெடுத்துவிட்டனர்.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி, தன் மகன்களுக்காக முறைகேடாக அரசு நிலங்களை இப்படி ஒதுக்கீடு செய்த எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று முக்கிய எதிர்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்த தொடங்கிவிட்டனர்.

இது தொடர்பாக இன்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளக்கட்சி மாநில கட்சித் தலைவருமான குமாரசுவாமி, நில ஊழலில் எடியூரப்பாவுக்கு உள்ள தொடர்பை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும், தனது குடும்ப உறுப்பினர்கள் ஆதாயத்திற்காக அவர் கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், எனவே இனியும் முதல்வர் பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டதாகவும் சீறித்தள்ளினார்.

எதிர்கட்சிகள் ஒருபக்கம், கட்சித் தலைமை மறுபக்கம் என இருபக்கமும் மாற்றிமாற்றி வாங்கிக்கட்டிக்கொண்டிருப்பதால், விழி பிதுங்கிபோய் நிற்கிறார் எடியூரப்பா!

ஆனாலும் ஸ்பெக்ட்ரம் ஆகட்டும், டான்சி நிலம் ஒதுக்கீடு ஆகட்டும், இதோ எடியூரப்பா புகுந்து விளையாடிய நில ஒதுக்கீடு விவகார ஆகட்டும்... எதுவானாலும் " நீ மட்டும் ஒழுங்கா...?!" என்ற ரீதியில் நமது அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாற்றிக்கொண்டு விடுகின்ற அறிக்கை வாணவேடிக்கைகளை வாய்பிளந்தபார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அடுத்த தேர்தலில் அந்த கட்சிகளிலேயே ஏதாவது ஒன்றை அரியணையில் ஏற்றி அழகு பார்ப்பதுதானே நமது திருவாளர் பொதுஜனத்தின் வாடிக்கை!

webdunia.com