கல்வி தீர்ப்பாய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

23/08/2010 22:47

உயர்கல்வி நிறுவனங்களில் தாவாக்களை விரைவாக  தீர்த்து வைப்பதற்கான கல்வி தீர்ப்பாய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் இன்று (23.8.10) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் 2010ஆம் ஆண்டு கல்வி நடுவர் மன்ற மசோதாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதாவின்படி தேசிய நிலையில் ஒன்றும் மாநிலங்களில் ஒன்றுமாக இரண்டு அடக்கு நடுவர் மன்றங்கள் அமைக்கப்படும். மாநில நடுவர் மன்றங்கள், ஆசிரியர்கள்,ஊழியர்கள், மாணவர்கள் குறித்த விஷயங்களை விசாரித்து தீர்ப்பளிக்க உரிமை பெற்றிருக்கும்.

தேசிய கல்வி தீர்ப்பாயம் உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகள் தொடர்பான வழக்குகளையும் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் குறித்த வழக்குகளையும் விசாரித்து விரைவாக தீர்ப்பளிக்கும்.

இந்த 2 அடுக்கு தீர்ப்பாயங்களின் உத்தரவுகளை மீறும் நிறுவனங்களுக்கு மூன்றாண்டு காவல்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இந்த இரண்டும் கிடைப்பதற்கு மசோதா வகை செய்கிறது.

மக்களவையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த மசோதா நடப்பு கூட்டத்தொடரிலேயே பரிசீலிக்கப்பட்டு அவையின் ஒப்புதலை பெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.