காசா பகுதிக்கு கப்பல் பயணம்: கனடா அரசு எச்சரிக்கை

30/05/2011 09:38

பாலஸ்தீனம் காசா திட்டுப்பகுதி எல்லைகள் தடுக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகளின்றி தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக சர்வதேச சமூகத்தினர் நிவாரணப் பொருட்களை ஏந்திய சிறு படகுகள் மூலம் கப்பல் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

நிவாரண உதவிப் பொருட்களுடன் வரும் கப்பல்களை இஸ்ரேல் தடுத்து வருகிறது. இந்த நிலையில் அங்கீகாரம் இல்லாமல் காசா திட்டுப் பகுதிக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரப்பூர்வ மற்ற நடவடிக்கைகள் வன்முறையை தூண்டுவதாக அமையும் என கனேடிய அரசின் தலைமை ராஜ்ய உறவு நிர்வாகி எச்சரித்து உள்ளார்.

 

வருகிற ஜுன் மாதம் நிவாரணப் பொருட்களுடன் செல்வதாக கனேடியர்கள் குழு தெரிவித்து உள்ளது. இது குறித்து கனேடிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பெய்ர்ட் கூறுகையில்,"அங்கீகாரம் பெறாமல் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கை பதட்டத்தை ஏற்படுத்தும். காசாவில் பரிதவிக்கும் மக்களுக்கும் உதவி செய்ய முடியாத நிலை ஏற்படும்" என்றார்.

 

2010ம் ஆண்டு மே 31ம் திகதி சர்வதேச நிவாரண உதவிப் பொருட்களுடன் மவி மர்மரா கப்பல் காசாவை நோக்கி முன்னேறி வந்தது. இந்தக் கப்பலை இஸ்ரேலிய கடற்படையினர் தடுத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சர்வதேச நீர் எல்லையில் 9 துருக்கி சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்தது.

 

கனடாவில் உள்ள 100 அமைப்புகள் ஒரு கனேடிய படகில் நிவாரணப் பொருட்களை அனுப்ப போவதாக தெரிவித்துள்ளன. இரண்டாவது சுதந்திர கப்பல் பயணம் என்ற இந்த கடல்வழி திட்டத்தில் மொத்தம் 15 கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் செல்கின்றன.

newsonews.com