காதலித்து வீட்டை வீட்டு ஓடுபவர்களால் போலீசாருக்கு பெரும் தலைவலி - சமூகக் கட்டுரை

04/11/2010 12:57

 

வீட்டை விட்டு ஓடும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களால், போலீசாருக்கு தீராத தலைவலி ஏற்படுகிறது. இவர்கள் பற்றி கவனம் திசை திரும்புவதால் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றங்களை கண்டறியும் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் சமீபகாலமாக இளம்பெண்கள், வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகிறது. காதல், சித்ரவதை, வீட்டில் கோபித்து கொள்வது, சினிமா மோகம் போன்ற காரணங்களால் "டீன் ஏஜ்' பெண்கள், வீட்டின் பாதுகாப்பான சூழலை விட்டு, வெளியேறுகின்றனர். இச்சமயங்களில் சிலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதோடு கொலையாகின்றனர். இன்னும் சில பெண்கள், பிரச்னைகளை சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், சராசரியாக பத்து வழக்குகள் இப்படி வருகின்றன. வழக்கு பதிந்தால், இளம்பெண்ணுக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், உடனடியாக வழக்கு பதிவு செய்வதில்லை.

 

பெண் கிடைக்கவில்லை என்றாலோ, பெற்றோர் வற்புறுத்தினாலோ வழக்கு பதிகின்றனர். ஐகோர்ட்களில் பதிவு செய்யப்படும் ஆட்கொணர்வு மனுக்களில், பெரும்பாலும் இளம்பெண் கடத்தப்பட்டதாகவே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஓடிச்செல்லும் இளம்பெண்களை விசாரிக்கும் போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. ஏனென்றால் ஆண்டுகணக்கில் காதலித்து பழகியவர்களாக இவர்கள் இருக்கவில்லை. வெறும் பத்து நாட்கள், 20 நாட்கள் பழக்கத்தில், தைரியமாக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பக்கத்து வீட்டு பையன், மொபைல் போனுக்கு ரீ-சார்ஜ் செய்யும் இடத்தில் உள்ள வாலிபர், எதேச்சையாக வரும் "ராங் கால்', பஸ் டிரைவர் என வெகு சமீபத்தில் பழகியவர்களிடம், எளிதாக ஏமாந்து விடுகின்றனர். சமீபகாலமாக ஷேர் ஆட்டோ டிரைவர்களுடன் பழகுவதும் அதிகரித்துள்ளது.

 

கண்காணிப்பில்லை: பெற்றோர் முறையாக கண்காணித்தாலே, இவர்களின் தவறுகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆனால் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், பெண்குழந்தைகளுக்கு மொபைல் போன் வாங்கி கொடுக்கின்றனர். பையன்களுக்கு டூவீலர் தருகின்றனர். பழகும் ஆண்களுக்கு அடிக்கடி "மிஸ்டு கால்' கொடுப்பது, "கால் மீ' என எஸ்.எம்.எஸ்., செய்யும் பழக்கம் அதிகமாக உள்ளது.

 

பத்து நாட்கள் பழக்கத்தில், வீட்டில் உள்ள நகை, பணத்துடன் வெளியேறும் இளம்பெண்கள், வெளியூரில் சென்று நான்கைந்து மாதங்கள் தங்குகின்றனர். பணமும், நகையும் கரைந்ததும் போக்கிடம் தெரியாமல், மீண்டும் பெற்றோரிடம் வருகின்றனர். சில பெற்றோர் மீண்டும் ஏற்றுக் கொள்வதில்லை. அல்லது பெற்றோர் கண்டுபிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தால், அந்தப் பையனுடன் செல்வதாக தெரிவிக்கின்றனர். பெற்றோர் அழைத்தாலும் மறுத்து விடுகின்றனர். பெற்றோரின் கண்ணீரும், வேதனையும் இவர்களுக்கு புரிவதில்லை. வேலையில்லாமல் சுற்றித் திரியும் வாலிபனால்,பயன் இல்லை என்ற நிலையில், தற்கொலை செய்கின்றனர்.  ஆசை, ஆசையாக வளர்த்த பெற்றோரை ஏமாற்றி, தெரியாத ஒருவனுடன் சென்று, மீண்டு வருவது பெரிய வேதனையாக இருப்பதாக, இன்ஸ்பெக்டர்கள் தெரிவித்தனர். 

 

குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு மாணவி முதல் கல்லூரி மாணவி வரை, இத்தவறை செய்கின்றனர். ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு வழக்குக்குச் செல்லும் போது, போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எஸ்.ஐ., உடன் செல்ல வேண்டியுள்ளது. பெண்ணையும், பையனையும் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அவர்களின் வழக்குகளை விசாரிக்க கூடுதல் நேரம் செலவிட வேண்டியுள்ளது. இப்படி ஒவ்வொரு வழக்கிற்கும் மெனக்கெட வேண்டியிருப்பதால், சட்டம், ஒழுங்கு தொடர்பான பணிகளை முழுமையாக கவனிக்க முடியவில்லை.

 

என்ன தீர்வு : இந்த வயதில் மொபைல் போன் வாங்கித் தரவேண்டியதில்லை. அப்படியே வாங்கி தந்தாலும், அவர்களை அறியாமல் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இரவில் பெற்றோருக்கு தெரியாமல் போன் செய்தாலோ, எஸ்.எம்.எஸ்., அனுப்பினாலோ உடனடியாக கண்காணித்து அறிவுரை கூற வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டு பேச வேண்டும். பள்ளிகளில் வாழ்க்கை முறைகளை கற்றுத் தரவேண்டும். என்றோ ஒருநாள் சொல்லித் தருவதோடு கடமை முடிந்துவிடாது. மாதத்தில் ஒருநாள் வீதம், கவுன்சிலிங் செய்தாலே, இளம்பெண்கள் திருந்தி விடுவர். பெற்றோருக்கும், போலீசாருக்கும் தலைவலி குறைந்து விடும்.

https://www.dinamalar.com/News_Detail.asp?Id=119406