காமன்வெல்த் ஊழலை விசாரிக்க உயர்நிலைக் குழு: பிரதமர் உத்தரவு

16/10/2010 13:33

புது தில்லி, அக். 15: காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றுள்ளது குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழுவை அமைத்து பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

 

பொதுக் கணக்கு மற்றும் தணிக்கைக்குழு முன்னாள் தலைவர் வி.கே. சங்லூ தலைமையிலான இந்த உயர் நிலைக்குழு 3 மாதத்தில் தனது அறிக்கையை பிரதமரிடம் அளிக்கும். இந்தக் குழு தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் ஓரிருநாளில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றதான குற்றச்சாட்டு மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. முதலில் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதே முக்கியம். பின்னர் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் வியாழக்கிழமை போட்டிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த நாளிலேயே விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

 

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாதி மற்றும் குழு உறுப்பினர்கள் மீது பலகோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதால் கல்மாதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டு மற்றும் விருந்து நிகழ்ச்சி பிரதமரின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுரேஷ் கல்மாதி மற்றும் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்குழு விசாரணையில் காமன்வெல்த் போட்டிக்கு செய்யப்பட்ட செலவுகள் தொடர்பான கணக்கு விவரங்கள் முழுமையாக ஆய்வுக்கு உள்படுத்தப்படும் என்று தெரிகிறது.

 

Dinamani