காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக கன்னியாகுமரி வரை புதிய ரெயில்

22/09/2010 11:32

ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு புதிய ரெயில் இயக்கப்பட வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்டு காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரெயில் திட்டம் தொடங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி மம்தாபானர்ஜி அறிவித்தார். பாராளுமன்றத்திலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
இதையடுத்து புதிய ரெயில் திட்டம் அமைப்பதற்கான சர்வே பணிகளும் நடத்தப்பட்டன. ஆனாலும் பணிகள் தொடங்காமலேயே உள்ளது. எனவே கீழக்கரையை சேர்ந்த தங்கம் ராதாகிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த புதிய ரெயில் திட்டத்திற்கான கால தாமதம் குறித்து விளக்கம் கேட்டார்.
 
இதற்கு மத்திய அரசின் நிர்வாக அதிகாரி ஒருவர் பதில் அளித்து உள்ளார். அதில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை அறிவிக்கப்பட்ட புதிய ரெயில் கன்னியாகுமரி வரை நீடிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
தூத்துக்குடியில் இருந்து மீளவிட்டான், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் வழியாக அந்த ரெயில் கன்னியாகுமரி வரை இயக்கப்படும் என்றும், ராமேசுவரம் வரும் வடநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வரை சென்று வருவதால் இந்த புதிய ரெயில் திட்டம் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டு விரைவில் பணி தொடங்கும் என அந்த அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Maalaimalar