காரைக்குடியில் வரைவு எதிர் தாக்குதல் படை அமைக்க மத்திய அரசு திட்டம்

02/11/2010 09:43

சிவகங்கை; வி.ஐ.பி., களின் பாதுகாப்பு, தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் கருதி "விரைவு எதிர்தாக்குதல் படை' (குயிக் ரியாக்டிங் டீம்), சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு (சிவகங்கை தொகுதி எம்.பி.,), மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் உள்ளது. இதேபோல, ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் நுழையும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி இப்படையை அமைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், இன்ஸ்பெக்டர் தலைமையில் 30 கமாண்டோ படை வீரர்கள் இருப்பர். தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் நேர்ந்தால், எதிர்தாக்குதல் மேற்கொள்ளவர். காரைக்குடியில், இதற்கான மையம் அமைக்கப்படும். ராஜசேகரன் எஸ்.பி., கூறுகையில், ""இப்படை வீரர்கள், விரைவில் காரைக்குடியில் பணியேற்பர். வி.ஐ.பி., பாதுகாப்பு, பேரிடர் மீட்பு பணிகளில் இவர்கள் செயலாற்றுவர்,'' என்றார்.