காவிப் பயங்கரவாதம் - ப.சிதம்பரம் எச்சரிக்கை

26/08/2010 13:07

நாட்டில் புதுவித காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் காவ‌ல்துறை தலைவ‌ர்க‌ள் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய ப.சிதம்பரம்,  நாட்டில் நடைபெற்றுள்ள பல்வேறு குண்டு வெடிப்புக்களில் காவிப் பயங்கரவாதத்தின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மாலேகான், நந்தித், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மசூதி, கோவாவின் மார்கோ உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புக்களில் இந்துத்துவாவின் கைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

மாலேகான் மற்றும் நந்தித் குண்டுவெடிப்புக்களுக்கு பின்னணியில் சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பே செயல்பட்டது என்பதை மும்பைத்தாக்குதலின் போது கொல்லப்பட்ட மஹாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.