காஷ்மீரில் பெண் வேட்பாளர் ஹசீனா பேகம் சுட்டுக் கொலை

16/04/2011 18:18

காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

 

ஹசீனா பேகம் (40) என்னும் அவர், காஷ்மீரில் முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.

 

 

நேற்றிரவு அவர் பகேர்போரா பகுதியில் உள்ள கர்போரா என்னும் இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுடப்பட்டதும் புல்வாமா மாவட்ட மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு ஹசீனாவின் உயிர் பிரிந்தது.

 

 

 

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் 13-ம் தேதி முதல் 16 கட்டமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தினமணி