காஷ்மீரில் மனித உரிமை மீறல்: 104 ராணுவத்தினர் தண்டிப்பு - இந்திய ராணுவத் தளபதி

26/10/2010 16:33

ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இதுவரை 104 ராணுவத்தினர் தண்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் கூறியுள்ளார்.

ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாற்றை மறுத்த வி.கே.சிங், 95 விழுக்காடு குற்றச்சாற்றுகள் போலியானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த வி.கே.சிங், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 988 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 965 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் 940 புகார்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 புகார்களே உண்மையானவை.

இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள வி.கே.சிங், 39 ராணுவ அதிகாரிகள் உட்பட 104 ராணுவத்தினருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் செய்த குற்றங்களுக்காக 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பலர் பணியில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே எக்காரணத்தைக் கொண்டும் போலியான எண்கவுண்டர்களும், தீவிரவாத முத்திரை குத்தப்படுவதும், மனித உரிமை மீறல்களிலு‌ம் ராணுவத்தினர் ஈடுவதை அனுமதிக்க முடியாது என்று வி.கே.சிங் கூறியுள்ளார்.

Webdunia