காஷ்மீர் குறித்த கருத்து: ஈரான் தூதரிடம் இந்தியா ஆட்சேபம்

20/11/2010 19:27

காஷ்மீர் குறித்து ஈரான் தலைவர் அயாத்துல்லா கமேனி தெரிவித்த கருத்து குறித்து அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.

ஹஜ் யாத்ரீகர்களுக்கான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்த அயாத்துல்லா கமேனி, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்ததோடு, வட இந்தியா ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்று இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கமேனியின் இந்த கருத்து குறித்து கடும் அதிருப்தியடைந்த இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், டெல்லியிலுள்ள ஈரானிய தூதரக அதிகாரியை சம்மன் அனுப்பி இன்று நேரில் வரவழைத்தது.

பின்னர் அவரிடம் இந்திய அயலுறவுத் துறை அமைச்சக இணைச் செயலர் ஒய்.கே. சின்ஹா, கமேனியின் கருத்து மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக கூறி இந்தியாவின் ஆட்சேபத்தை தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதமும் கமேனி இதே கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia.com