காஷ்மீர் நிலவரம் - அனைத்துக்கட்சிக் குழுவுக்கு நடுநிலையான கண்ணோட்டம் கிடைத்துள்ளது

22/09/2010 10:22

காஷ்மீரில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களின்போது போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள   மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டது தில்லியிலிருந்து சென்ற அனைத்துக் கட்சி குழு.

இந்த குழுவைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் எஸ்எம்எச்எஸ் மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் சிகிச்சை பெறுபவர்களுக்கு துணையாக இருந்து கவனிப்பவர்களும் உறவினர்களும் அவர்கள் வருகைக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்ற குழு உறுப்பிர்களில் அடங்குவர். சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர்கள் கூறுவதை கவனமாக கேட்டனர்.

அனைத்துக் கட்சிக்குழு உறுப்பினர்கள் வருகையையொட்டி மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுப்பெறவே, வேறு வழியின்றி அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் இடையிலேயே மருத்துவமனையை விட்டு அனைத்துக் கட்சிக் குழு உறுப்பினர்கள் வெளியேறினர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

யெச்சூரியும், சுஷ்மா ஸ்வராஜும் சூரா பகுதியில் உள்ள எஸ்கேஐஎம்எஸ் மருத்துவமனைக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். அங்கேயும் எதிர்ப்பு இருப்பது நிச்சயம் என்பது தெரியவே அந்த திட்டத்தை அவர்கள் கைவிட்டனர். இதே போல வேறு பல மருத்துவமனைகளுக்கும் செல்ல அனைத்துக்கட்சிக் குழுவின் பல்வேறு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் திரண்டு அனைத்துக் கட்சிக் குழு உறுப்பினர்கள் வருகைக்கு எதிராக முழக்கமிட்டபடி இருந்தனர். இதனால் அவர்களும் தமது திட்டத்தை கைவிட்டனர்.

நடுநிலை கண்ணோட்டம் கிடைத்துள்ளது: காஷ்மீர் நிலவரம் பற்றி நேரடியாக அறிய தில்லியிலிருந்து வந்துள்ள அனைத்துக்கட்சிக் குழுவுக்கு நடுநிலையான கண்ணோட்டம் கிடைத்துள்ளது. அந்த வகையில் திருப்தி என மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா குறிப்பிட்டார்.

கடந்த 13-ம் தேதி அமெரிக்காவில் குர்ஆன் நகல் எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தியை அடுத்தும், இந்திய விரோத எண்ண தூண்டுதலின் பேரிலும் போராட்டக்காரர்களால் மோசமான வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்த தங்மார்க் நகரைப் பார்வையிட, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையில் வந்த 11 உறுப்பினர்களை அழைத்து வந்த ஓமர் அப்துல்லா நிருபர்களிடம் பேசினார்.

அனைத்துக் கட்சிக் குழுவுக்கு, காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை நடுநிலை கண்ணோட்டத்துடன் அறிய முடிந்துள்ளது என்பது திருப்தி தருகிறது. இது மாநில அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதற்காக, எல்லோரும் என்னை புகழ்ந்து பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

ஸ்ரீநகரிலிருந்து 44 கிமீ தொலைவில் உள்ளது தங்மார்க். கடந்த 13-ம் தேதி இந்த நகரில் உள்ள கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்தும் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தீ வைத்தது. மேலும் அரசு அலுவலகங்களும் தீவைத்து நாசம் செய்யப்பட்டன. இந்த நகரை பார்க்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக்குழு விரும்பவே அவர்களை முதல்வர் அழைத்து வந்தார்.

சையது அலி ஷா கிலானி, ஹுரியத் தலைவர் மீர்வைஸ் உமர் பரூக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்ட பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்தன் மூலம் மாநிலத்தின் அனைத்துத் தரப்பிரின் கருத்தையும் அனைத்துக்கட்சிக் குழுவால் அறிய முடிந்துள்ளது என்றார் ஓமர் அப்துல்லா.

எல்லாவற்றையும் முன்கூட்டி ஏற்பாடு செய்துவிட்டு பெயருக்கு அûனைத்துக் கட்சிக் குழு பார்வையிட ஏற்பாடு செய்ததாக கூறப்படும் புகாரை மறுத்தார் ஓமர்.

காஷ்மீரானது,அங்குள்ள கட்சிகளுடன் முடிந்துவிடவில்லை. பிரிவினைவாத குழுக்களையும் உள்ளடக்கியது என்பதை நிராகரிக்கமுடியாது என்றும் அவர் சொன்னார்.

பாஜக தலைவர் அருண்ஜேட்லி உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்று வந்தனர். அவர்களை இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தித்து காஷ்மீர் பிரச்னைக்கு விரைவாக தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தினர்.

ராணுவ சிறப்பு அதிகார சட்டத்த ரத்து செய்ய வேண்டும் என்றும் வறுமை, வேலையில்லா திண்டாட்ட ஒழிப்பு நடவடிக்கைகளை தொடங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். மாநிலத்தில் கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை என்றும் தெரிவித்தனர்.

கிலானியை சந்தித்தார் பாஸ்வான்

முதல் நாள் நடந்த சந்திப்புக்கு எதிர்ப்பு ஏற்பட்டபோதும் அனைத்துக் கட்சிக் குழுவின் இரண்டாவது நாள் பயணத்தில் ஸ்ரீநகரில் கிலானியை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான்.

இந்த சந்திப்பின்போது காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரம், காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மை சீக்கியர் பிரச்னையை முன்வைத்தார்.

அப்போது, சிறுபான்மையினர், காஷ்மீரிகளின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்றும், சிறுபான்மையினருக்கு வாழ்வுரிமை, அவர்களின் கண்ணியம், சுதந்திரத்துக்கு இஸ்லாம் உத்தரவாதம் தருகிறது என்று கிலானி கூறியதாகவும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தவர்கள் தெரிவித்தனர்