காஷ்மீர் - இந்தியாவுக்கு உண்மைச் சுடுகிறது: மே 17 அமைப்பு

14/11/2010 15:21

‘காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை’ என்று பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் வெளியிட்ட கருத்தில் குற்றமில்லை என்று கூறியும், அவர் மீதான ஊடக, இந்துத்துவா தாக்குதல்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் கண்டனம் தெரிவித்தும் மே 17 இயக்கதினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடந்த மே 17 இயக்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமுருகன் ( மே 17 இயக்கம்), தோழர் தியாகு (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) மற்றும் அய்யனார் (தமிழின பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் அருந்திராய் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர்.


அய்யனார் பேசுகையில், காஷ்மீர் மக்கள் குறித்த உண்மைகளை உலக மக்கள் அறியும் வகையில் டெல்லியில் நடந்த கருத்தரங்கில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், பாஜக கட்சியினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.


காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பதா பாகிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடு என்ற பழைய தகுதி நிலையை அடைவதா என்ற முடிவெடுக்கும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு உள்ளது. இதை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியதற்காக அருந்ததிராயை தேச துரோகி என்று குற்றம் சாட்டுகின்றன இந்துத்துவா கட்சிகள்.


அருந்ததிராய் பேசிய உண்மைக் கருத்துகளை எல்லாம் முழுவதுமாக வெளியிடாமல், அவர் மீது அனைவருக்கும் வெறுப்பு ஏற்படும் வகையில் இந்துத்துவா, ஊடகங்கள் திரித்து வெளியிட்டன.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் புரிந்துள்ளது இந்திய அரசு. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த பாஜகவும் இதே ஊழலில் ஈடுபட்டது. அதுவெல்லாம் தேசத் துரோகம் ஆகாது. ஆனால், அருந்ததி ராய் காஷ்மீரின் உண்மை நிலையை பேசியது தேசத் துரோகம் என்கிறார்கள் என்றார்.
   
திருமுருகன் பேசுகையில், அருந்ததி ராய் போன்ற உண்மையான போராளிகள் மீது இந்துத்துவா, ஊடகங்கள் குற்றம் சாட்டியே வந்துள்ளன. இதே போல்தான், ஈழ விடுதலை போராளிகளுக்கு எதிராக இந்துத்துவா, ஊடகங்களும், கட்சிகளும் செயல்பட்டன. இதனால் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


தமிழின மீனவர்களுக்காக குரல்கொடுத்த நம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கும் இந்த பாஸிச இந்துத்துவா ஊடகங்களும், இந்துத்துவா கட்சிகளுமே காரணம்.


அருந்ததிராய் போன்ற உண்மையான மக்கள் உரிமைப் போராளிகள் மீது நடத்தப்படும் ஊடக பயங்கரவாதத்தை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இத்தகைய தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது என்றார்.


தியாகு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் போன்ற இந்துத்துவா கட்சிகள் இப்போது அருந்ததிராய் மீது தாக்குதல் நடத்தியது போன்று, இதற்கு முன்பும் பல தாக்குதல்களை நடத்தியுள்ளன. அதை இந்த நாட்டு மக்கள் நன்கறிவர்.


ஏன் தேசத் தந்தை காந்தி மகான் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், பாபர் மசூதி இடிப்புக்கும்கூட இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பே காரணம். அதுவெல்லாம் தேச பக்தியா என்ன?. காஷ்மீர் ஒன்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல என்று கூறியதை மட்டும் தேச பற்றுக்கு எதிரான, தேச விரோத பேச்சு என்பதா? 


அருந்ததிராய் ஒன்றும், காஷ்மீர் பிரச்சனையை தூண்டக் கூடியவரோ, மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கோ, அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கோ ஆதரவானவரோ அல்ல. இவற்றைப் பற்றி எல்லாம் ஆராய்ந்து அருந்ததிராய் உண்மைக் கருத்துக்களை உலகிற்கு வெளியிட்டார். அவ்வளவுதான்.


காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவம், மத்திய கூடுதல் காவற்படை, மாநில காவல் படை ஆகியவற்றை எதிர்த்து அம்மாநில மக்கள் குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும் கல்லெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது, ராணுவத்தினர் துப்பாகிச் சூடு நடத்தியதில் இது வரை 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


தங்கள் உரிமையை பெற கல்வீச்சு நடத்துபவர்கள் வன்முறையாளர்கள். ஆனால் எந்திரத் துப்பாக்கியால் சுடுபவர்கள் வன்முறையாளர்கள் அல்ல.


உரிமைக்காக போராடுபவர்கள் வன்முறையாளார்கள். பயங்கரவாதிகள். ஆனால் மக்கள் மீது எந்திரத் துப்பாக்கியால் சுடுபவர்கள் இந்திய ஒற்றுமைக்காக போராடுபவர்களாம்.


காஷ்மீர் இந்தியாவில் இணைக்கப்பட்டபோது, அங்கே ஹரிசிங் என்ற இந்து மன்னன் ஆட்சி நடத்தினான். மன்னருக்கு இந்தியாவின் வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன் எழுதிய கடிதத்தில், “இந்தியாவுடனான இணைப்பு காஷ்மீர் மக்களின் வாக்கெடுப்பு ஒப்புதல் பெற்றப் பிறகே இறுதி செய்யப்படும் என்று உறுதி கூறினார்.


அதுமட்டுமில்லாமல், காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் மேற்பார்வையில் அம்மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும்’ என சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேரு காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே உறுதி அளித்தார்.


காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதற்காகவே, இந்தியா, பாகிஸ்தானுக்காக ஐ.நா இரண்டு ஆணையங்களையே உருவாக்கியது.


இதெல்லாம் விட, காஷ்மீர் மக்களுக்காக வரையறுக்கப்பட்ட சுயாட்சி வழங்கப்பட்டு, அதற்காக அரசியல் சட்டத்தில் ‘370 வது பிரிவு’ என்ற ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதே. இந்த 370 வது பிரிவில் கூறப்பட்டுள்ள மிகமிக முக்கியமான வாசகம் ‘ஜம்மு காஷ்மீர் அல்லாத இந்திய மாநிலங்களுக்கு இச்சட்டம் உட்பட்டது’ என்பதாகும்.


காஷ்மீர் இந்தியாவுடன் பிரிக்க முடியாத பகுதி என்றால் இந்தச் சட்டம் ஏன் இயற்றப்படவேண்டும், அதில் ஏன் அப்படி ஒரு வாசகம் இடம் பெறவேண்டும்.


இந்த வரலாற்று உண்மைகளை யாரும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது. இதைத்தான் அருந்ததிராய் காஷ்மீர் மக்கள் சார்பில் இந்திய மக்களுக்கும், உலக மக்களும் வெளிப்படுத்தினார். ஆனால் அவரின் மீது, இந்த பாஸிச இந்துத்துவா, ஊடகங்கள், கட்சிகள் குற்றம் சாட்டி தாக்குதல் நடத்துகின்றன.  


இந்திய அரசு, இந்தியாவின் எந்தப் பகுதியையும் யாருக்கும் எப்போதும், எந்நிலையிலும் விட்டுக்கொடுக்காது என்றால்... தமிழ்த் தேசத்துக்கு சொந்தமான கச்சதீவை எந்தத் தமிழனிடமும் அனுமதி கேட்காமலேயே சிங்கள அரசுக்கு விட்டுக்கொடுத்தது எப்படி?


ஏனெனில் கட்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல. அது தமிழ் தேசத்தத்திற்கு சொந்தமானது. தமிழ் நாட்டின் ராமநாதபுர மாவட்டதைச் சார்ந்தது. சேதுபதி மன்னனால் ஆளப்பட்ட பகுதி கட்சத்தீவு. அதனாலேயே இந்தியாவிற்கு சொந்தமில்லாத, தமிழ் தேசத்துக்கு மட்டுமே சொந்தமான கட்சத்தீவை ஆதிக்க அதிகாரத்தில் சிங்கள அரசுக்கு கொடுத்துவிட்டது இந்த இந்திய அரசு.


காஷ்மீரில், பாகிஸ்தானுக்கு சொந்தமான ஆசாத் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான ஜம்மு காஷ்மீர் என இரு பகுதிகள் உள்ளன. இவற்றிக்கிடையே எந்த விதமான பிரிவும் கிடையாது. எல்லைக் கோடும் கிடையாது. இருநாட்டுக்கும் பொதுவான 'போர் நிறுத்தக்கோடு' மட்டுமே உள்ளது. அதுதவிர அங்கு தனியாக எந்த ஒரு எல்லைப் பிரிவும் கிடையாது.


இது போன்ற உண்மைகளைதான் அருந்ததி ராய் போன்ற மக்கள் உரிமை போராளிகள் சொல்லிவருகிறார்கள். இந்தியாவுக்கு இந்த உண்மை சுடுகிறது. இதிலிருந்தே தெரிகிறது இந்தியா பொய்பேசும் தேசம் என்று. இவ்வாறு தியாகு குறிப்பிட்டார்.

nakkheeran.in