கீழக்கரை மசூதியில் நள்ளிரவில் திருட்டு

18/05/2011 09:41

கீழக்கரை மசூதியில் சனிக்கிழமை இரவு ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

 

கீழக்கரை 500 பிளாட் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான மசூதி உள்ளது. அங்கு சனிக்கிழமை இரவு தொழுகை முடித்துவிட்டு, அந்த அமைப்பின் அப்பகுதி பொறுப்பாளர் அப்பாஸ், வழக்கம்போல அந்த மசூதியிலேயே தூங்கிவிட்டார். அருகில் செல்போனை வைத்திருந்தார்.

 

அதிகாலை வழிபாட்டிற்காக எழுந்து பார்த்த போது, செல்போனை காணவில்லை. உடனே தனது அமைப்பின் நிர்வாகிகளுடன் மற்ற பொருள்களை சரிபார்த்தபோது ரொக்கம் ரூ. 5ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள 3 மைக் செட்டுகள் ஆகியவையும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

 

இது தொடர்பாக கீழக்கரை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த சில மாதங்களாகவே கீழக்கரையில் தொடர்ந்து திருட்டுகள் நடைபெற்று வருவதால், இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து சுற்றுவதை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது சம்பந்தமாக மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் முகைதீன் இபுராஹீம் கூறியதாவது:

 

கீழக்கரை பகுதியில் மருந்துக் கடைகள் உள்பட அனைத்து கடைகளையும் இரவு 11 மணிக்குள் மூட வேண்டும் என உத்தரவு போட்டுள்ளனர். இரவு நேரங்களில் போலீஸôர் ரோந்து சுற்றும்போது சிவப்பு சுழல்விளக்குடன் ஒலி எழுப்பிச் செல்வதால் திருடர்கள் உஷாராகிவிடுகின்றனர். போலீஸôர் சென்றவுடன் திருட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி திருட்டு நடந்து கொண்டு இருக்கிறது. எனவே இரவு நேர ரோந்தை அதிகப்படுத்துவதோடு, இரவு நேரங்களில் கடைகள் திறந்திருக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

 

 

தினமணி