குஜராத் கலவரங்கள்: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் அறிக்கை அளித்தது சிறப்பு புலனாய்வுக் குழு

26/10/2010 16:05

குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது.

 

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்கள், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாஃப்ரி கொல்லப்பட்டது உள்பட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

 

இந்த விசாரணைக் குழுவின் தலைவராக சி.பி.ஐ. யின் முன்னாள் இயக்குநர் ஆர். கே. ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்பான அறிக்கையை கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் இந்த குழு தாக்கல் செய்தது.

 

இந்நிலையில் மீண்டும் புதிய அறிக்கை ஒன்றை இக்குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். நீதிபதிகள் டி.கே. ஜெயின், பி. சதாசிவம், அஃப்டாப் ஆலம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சிடம் ராகவன் இரண்டாவது அறிக்கையை தாக்கல் செய்தார்.

தினமணி