சட்ட விரோத தொழிலாளர்களைத் தடுக்க மலேசியாவில் விரைவில் பயோமெட்ரிக் முறை

24/08/2010 09:14

வெளிநாடுகளில் இருந்து தங்களது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பணிபுரிய முனையும் தொழிலாளர்களை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் முறையை (விரல்ரேகைப் பதிவு) அறிமுகம் செய்ய மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது.

 இதை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியது: மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது. இதை தடுப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நாட்டுக்குள் நுழையும் ஒவ்வொரு வெளிநாட்டவரின் விரல் ரேகை உள்ளிட்ட அவர்களின் அனைத்து தகவல்களையும் திரட்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இதற்கான பணி முழுவீச்சில் தொடங்கும்.

இத்திட்டத்தை செயல்படுத்த அதிகமாக செலவாகாது. எனினும் மொத்த செலவில் குறிப்பிட்ட அளவு பங்கை வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் பயனடைபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இங்கு வந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஏதாவது தவறை செய்விட்டு அவர்களது நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டால் அவர்களை இங்கு அழைத்து வருபவர்கள் எவ்வித பொறுப்பும் ஏற்பதில்லை.

இனிமேல் இதை அனுமதிக்க முடியாது. வெளிநாட்டு தொழிலாளர்கள் தவறு செய்து தப்பிவிட்டால் அவர்களை அழைத்து வந்தவர்கள் அதற்கு பொறுப்பேற்பது அவசியம்.

நீண்டகாலமாக நாட்டுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் சட்டவிரோத தொழிலாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதற்கு குடியேற்றத்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, கடற்படை, வெளிநாட்டில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவரும் ஏஜென்ஸிகள் என அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன்.