சித்தார்கோட்டை அருகே பயங்கரம் மனைவியை கொன்று கணவர் தற்கொலை

26/10/2010 17:03

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தை அடுத்த இலந்தைகூட்டம் கிராமத்தைச்சேர்ந்தவர் நாகசுந்தரம் (வயது72). ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தார். அத்துடன் இறைச்சி கடைகளுக்கு தேவையான ஆடுகளை விற்பனையும் செய்து வந்தார்.
 
இவரது மனைவி நாகவள்ளி (65). பால் வியாபாரம் செய்து வந்த இவர் காட்டு வேலைக்கும் செல்வது வழக்கம்.
 
இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில் நாகசுந்தரம் தனக்கு வயதாகி விட்டதால் ஆடு வளர்க்கும் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தார். எனவே ஆடுகள் அனைத்தையும் விற்று விட்டு அந்த பணத்தை வங்கியில் செலுத்த முடிவு எடுத்தார்.
 
அதன்படி தான் வளர்த்து வந்த ஆடுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரிடம் ரூ.80 ஆயிரத்திற்கு விற்றார். அந்த பணத்தை தனது மனைவி நாகவள்ளியிடம் கொடுத்து வைத்து இருந்தார்.
 
நேற்று வங்கியில் செலுத்துவதற்காக மனைவியிடம் அந்த பணத்தை கேட்டார். அப்போது நாகவள்ளி ஆடு விற்ற பணம் அனைத்தையும் உறவினர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
 
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த நாகசுந்தரம் தான் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி தானம் செய்து விட்டாயே என்று கூறி மனைவியுடன் சண்டை போட்டார். வாக்கு வாதம் முற்றியதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நாகசுந்தரம், வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து துண்டாக்கினார். இதில் நாகவள்ளி துடி துடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
 
பின்னர் அவருக்கு அருகிலேயே வெகுநேரம் அமர்ந்து அழுது கொண்டிருந்த நாகசுந்தரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அங்கு கண வன்-மனைவி இருவரும் பிணமாக கிடந்தனர்.
இதுபற்றி அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த தேவிபட்டி ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மாலைமலர்