சிமியும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் மத அடிப்படைவாத அமைப்புகள்-ராகுல் காந்தி

07/10/2010 15:33

சிமியும் சரி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சரி இரண்டுமே மதவாத அமைப்புகள்தான். மத அடிப்படைவாதம்தான் இவற்றின் பொது லட்சியம் என்று விமர்சித்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனம் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. ராகுல் காந்திக்கு சங் பரிவார் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நேற்று போபாலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி கூறுகையில்,

தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும், ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே மத அடிப்படைவாத அமைப்புகள்தான். மத அடிப்படைவாதம்தான் இவர்களின் பொதுக் கருத்து.

சிமி அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அதன் பெரும்பாலான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு அமைப்புகளுமே மத அடிப்படைவாதத்தான் போதித்துக் கொண்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்., சிமி போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் கருத்துக்கள் மக்களை சென்றடைய அனுமதிக்க மாட்டோம். நமது கட்சிக்குள்ளும் இவை ஊடுறுவ அனுமதிக்க மாட்டோம்.

அயோத்தி தீர்ப்பில் பாபர் மசூதி இடிப்பு குறித்து எதுவுமே சொல்லப்படவில்லை. இது தவறாகும். மேலும் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடந்த கலவரங்கள் குறித்தும் அதில் எதுவும் சொல்லப்படவில்லை.

இன்றைய இளைஞர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் முக்கியமில்லை. அவர்களைப் பொறுத்தவரை கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைதான் பொருத்தமானது, முக்கியமானது. கல்வி முறையை நாம் மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாம் சிரமப்பட நேரிடும் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். கண்டனம்

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், இதுபோன்ற அர்த்தமற்ற பேச்சை பேசுவதற்கு முன்பு முதலில் அறிவை வளர்த்துக் கொள்ள ராகுல் முயல வேண்டும். இந்தியாவை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இத்தாலி, கொலம்பியா குறித்து மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது, இந்தியாவையும் அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், தடை செய்யப்பட்ட பிற அமைப்புகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் உணர் வேண்டும். அதேபோல காங்கிரஸ் கட்சியின் வரலாற்றையும் அவர் முதலில் படிக்க வேண்டும். கடந்த 60 ஆண்டு காலமாக அடிப்படைவாத கட்சியாக காங்கிரஸ் திகழ்கிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் அறிய வேண்டும் என்றார்.

சிமியும் கண்டனம்

அதேபோல சிமி அமைப்பின் முன்னாள் தலைவரான ஷாஹித் பாதர் பலாஹி கூறுகையில், ராகுலின் பேச்சு காங்கிரஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸும், சிமியும் ஒன்று என்றால், ஏன் மத்தியஅரசு இரு அமைப்புகளிடமும் இரு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். கடந்த 9 ஆண்டுகளாக சிமியை மட்டும் தடை செய்திருப்பது ஏன். ஏன் ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்யவில்லை.

2008ம் ஆண்டு நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான சிறப்பு தீர்ப்பாயம்,சிமி மீதான தடைக்கு எந்த காரணமும் இல்லை என்று கூறி தடையை நீக்கி உத்தரவிட்டார். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதை எதிர்த்து அப்பீல் செய்து எங்களுக்கு எதிராக முழுத் தடையையும் வாங்கி விட்டது.

சிமியின் பின்னணியை அறிய ராகுல் முயல வேண்டும். சிமி மீதான தடையை நீக்க உதவ வேண்டும் என்றார் பலாஹி.

தொடர்ந்து அவர்கூறுகையில், நாடு சுதந்திரமடைந்த பின்னர் மூன்று முறை ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பு தீவிரவாதத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினரான நாதுராம் கோட்சேதான் மகாத்மா காந்தியைக் கொன்றார். ஒரிசாவில் அவர்கள்தான் கிறிஸ்தவ சர்ச்சுகளை எரித்தனர். கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்களை இவர்கள்தான் உயிரோடு வைத்துக் கொளுத்தினர் என்றார்.

பாஜகவும் கண்டனம்

ராகுல் பேச்சு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், ராகுல் காந்தி மன நலம் சரியில்லை என்று கருதுகிறேன். மன நலம் இல்லாதவர்கள்தான் சிமியையும், ஆர்எஸ்எஸ்ஸையும் இணைத்துப் பேச முடியும். அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையே இது காட்டுகிறது. தான்தோன்றித்தனமாக, சட்டவிரோதமாக பேசி வருகிறார் ராகுல் காந்தி.

மத்தியப் பிரதேசத்தில் தன்னால் வெல்ல முடியாது என்று காங்கிரஸுக்குத் தெரிந்து விட்டது. அவர்களது விரக்தியைநாங்கள் உணர்கிறோம். ராகுல் காந்தியின் மாயாஜாலம் காங்கிரஸுக்கு எந்தப் பலனையும் தரப் போவதில்லை என்றார்.

ராகுல் காந்தி விளக்கம்

தனது பேச்சு தொடர்பான விமர்சனங்கள் குறித்து ராகுல் காந்தி பதிலளிக்கையில், என்னை முதிர்ச்சியற்றவன் என்று மட்டுமல்லாமல் அதற்கு மேலும் அவர்கள் விமர்சிக்கலாம், அதை நான் வரவேற்பேன். அதேசமயம், மத அடிப்படைவாதத்தைத்தான் இருவரும் போதிக்கிறார்கள் என்ற உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்.

Thatstamil