சிறுகடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒழுங்கு செய்வதற்கான புதிய விதிமுறைகள் ஆந்திராவில் அறிமுகம்

18/10/2010 17:05

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் சிறுகடன் வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒழுங்கு செய்வதற்கான புதிய விதிமுறைகளை அம்மாநில அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.

ஆந்திரத்தில் சிறுகடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றிருந்தவர்களில் சுமார் இருபது பேர் கடந்த இரண்டு மாதங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் இந்த அவசரச் சட்டம் மாநில அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

வருடத்துக்கு ஐம்பது சதவீத வட்டியைக் கூட அங்கே பல நிறுவனங்கள் கடன் பெற்றவர்களிடம் இருந்து வசூலித்து வந்ததாகத் தெரியவருகிறது.

வாங்கிய கடனையோ வட்டியையை திருப்பிச் செலுத்த சிரமப்படும் வாடிக்கையாளர்களை இந்த நிறுவனத்தினர் ஆட்களை வைத்து மிரட்டியும் அச்சுறுத்தியும் வந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் கீழ் சிறுகடன் வழங்கும் தொழில் செய்வோர் தங்களை அரசாங்கத்திடம் பதிவுசெய்து கொள்ள வேண்டும். தவிர அவர்கள் தங்களுக்கான செயல்பாட்டு ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகடன் வழங்கும் நிறுவனங்கள் வசூலிக்கக்கூடிய வட்டி விகிதத்திற்கான உச்சவரம்பு என்று எதுவும் தற்போதைய புதிய விதிகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.

சிறுகடன் வழங்கும் தொழில்துறை பெண்கள் சுயவுதவிக் குழுக்கள் தாங்கள் சேமித்த பணத்தை வங்கிகளில் சேமித்து வங்கிகளில் இருந்து கடன் பெற்றுவந்த நிலை மாறி தற்போது தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கில் இத்தொழிலை முன்னெடுத்துவருவதே ஆந்திரத்தில் தற்போது எழுந்துள்ள நிலைக்குக் காரணம் என்று தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற அபிவிருத்தி வங்கியான NABARD-டின் முன்னாள் துணைப் பொது மேலாளரும், ஹேண்ட் இன் ஹேண்ட் சிறுகடன் நிறுவன இயக்குநருமான கே.பி. கஸ்தூரி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சிறுகடன் வழங்கும் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைப்போல பங்கு சந்தையில் பங்குகளை விற்று நடத்தப்படும்போது அதன் இலாப நோக்கங்கள்தான் மேலோங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அளவுக்கதிகமான வட்டி வாங்குபவர்களை மாநில அரசாங்கம் அநியாயக் கடன்கள் தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் சிறுகடன் வழங்குவோர் வசூலிக்கக்கூடிய வட்டி விகிதத்துக்கான உச்ச வரம்பை அரசாங்கம் நிர்ணயிப்பது தற்போதைய நிதி நிர்வாகக் கட்டமைப்பில் சாத்தியமல்ல என்று கே.பி.கஸ்தூரி விளக்கினார்.
 

 
BBC Tamil