சிறுபான்மை பள்ளிகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பு

31/08/2010 09:42

சிறுபான்மை பள்ளிகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பு புதிதாக துவக்கப்படுகிறது. இதன் துவக்க விழா மற்றும் மாநில அளவிலான கருத்தரங்கம் வரும் 2ம் தேதி சென்னையில் நடக்கிறது.

தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பின் பொருளாளர் கிஷோர் குமார் கூறியதாவது:

தமிழகத்தில் முதன் முறையாக சிறுபான்மை பள்ளிகளை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மை பள்ளிகள் கூட்டமைப்பு துவக்கப்படுகிறது. பள்ளிகளை சேவை மனப்பான்மையுடன் நடத்துதல், பள்ளிகளுக்கு இடையேயான கட்டமைப்பு வசதிகளை பகிர்ந்து கொள்ளுதல், நலிவடைந்த பள்ளிகளை மேம்படுத்த உதவுதல் போன்ற நல்ல நோக்கங்களுடன் இந்த கூட்டமைப்பு துவக்கப்படுகிறது. தலைவராக ஸ்டான்லி செபஸ்டின், செயலராக உசைன் பாப்பு, பொதுச் செயலராக விக்டரும் செயல்படுவர். பதிவு செய்யப்பட்ட இந்த கூட்டமைப்பின், முறைப்படியான துவக்க விழா, செப்., 2ம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் நடக்கிறது. அன்று மாநில அளவிலான கருத்தரங்கமும் நடக்கிறது. சிறுபான்மை பள்ளிகள் சந்திக்கும் சவால்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

சிறுபான்மை ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னதுரை, ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, பேராயர்கள் சின்னப்பா, எஸ்றா சற்குணம், லாரன்ஸ் பயஸ் துரைராஜ், தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சிறுபான்மை பள்ளிகளில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பாக இருக்கும். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் சிறுபான்மை பள்ளிகளும் இதில் உறுப்பினர்களாக இணைவர். கிறிஸ்துவ, இஸ்லாமிய பள்ளிகள், மொழி அடிப்படையிலான சிறுபான்மை பள்ளிகளும் இதில் சேரலாம். இவ்வாறு கி÷ஷார் குமார் கூறினார்.

Dinamalar