சி.வி.சி.யாக தாமஸ் நீடிப்பது ஏற்புடையதா? உச்சநீதிமன்றம் கேள்வி

01/12/2010 21:38

 

2ஜி அலைக்கற்றை விற்பனையில் நடந்ததாகக் கருதப்படும் ஊழல் பற்றி விசாரிக்கும்போது தலைமை (ஊழல் தடுப்பு) கண்காணிப்பு ஆணையர் பதவியில் பி.ஜே. தாமஸ் இருப்பது ஏற்புடையதுதானா என்று மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

 

பாமாயில் இறக்குமதி ஊழல்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே. தாமஸ் அந்த மாநில அரசில் அதிகாரியாக இருந்தபோது பனை எண்ணெய் இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு அதில் பி.ஜே. தாமஸ் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு இன்னமும் முடிவடையாத நிலையில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டவராகவே இருக்கிறார்.

 

இந்த நிலையில் நாட்டில் நடைபெறும் ஊழல்களையும் முறைகேடுகளையும் விசாரிக்கும் உயர் அமைப்புக்கு அவரையே தலைமை அதிகாரியாக நியமித்திருப்பதை ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி ஆட்சேபித்து வருகின்றன.

 

செயலராக இருந்தவரே இவர்தான்:

 

போதாக்குறைக்கு, 2 ஜி அலைக்கற்றையின் சர்ச்சைக்கிடமான விற்பனை முடிவின்போது மத்திய அரசில் அந்தத் துறையில் செயலராக இருந்தவரே பி.ஜே. தாமஸ்தான்.

 

எனவேதான், அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை ஒருங்கிணைக்கவும் முடுக்கிவிடவும் பி.ஜே. தாமஸ் விருப்பு வெறுப்பில்லாமல் நடவடிக்கை எடுப்பார் என்று எப்படி நம்பிக்கை ஏற்படும், எனவே அவர் இந்தப் பதவியில் தொடருவது ஏற்கத்தக்கதுதானா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, அசோக்குமார் கங்குலி அடங்கிய பெஞ்ச், செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

 

இந்த ஊழல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ.) ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்புக்குத் தலைமை தாங்கி, விசாரணையில் வழிகாட்ட வேண்டியவர் தலைமை கண்காணிப்பு ஆணையர். அந்தப் பதவியில் இருப்பவர், ஏற்கெனவே தான் தொலைத்தொடர்புத்துறை செயலராக இருந்தபோது எடுத்த முடிவை விரிவாகவும் முறையாகவும் விசாரிக்க அனுமதிப்பார் என்று எப்படி நம்புவது என்று நீதிபதிகள் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களைக் கேட்டார்.

 

நீதிமன்றத்தின் கருத்தை அரசிடம் தெரிவித்து, அரசின் பதிலைக் கேட்டுச் சொல்கிறேன் என்று அரசின் தலைமை வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) கோபால் சுப்ரமணியம் பதில் அளித்தார்.

 

மாற்றுக்கருத்து: சி.பி.ஐ. சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் மாற்றுக்கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.

 

ஒரு வழக்கில் ஏதேனும் ஒரு காரணத்தால் தலைமை கண்காணிப்பு ஆணையரால் செயல்பட முடியாமல் போனால் அந்த அமைப்பைச் சேர்ந்த இன்னொரு ஆணையர் அந்தக் கடமையை நிறைவேற்றலாம் என்று விதி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

 

பிரசாந்த் பூஷண் ஒப்புதல்: இந்த வழக்கில் பொதுநலன் வழக்குக்கான மையம் (சி.பி.ஐ.எல்.) சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த யோசனையைத் தாங்கள் வரவேற்பதாகவும் இதில் தங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 

இந்த ஆணையத்தில் இருக்கும் ஆர். ஸ்ரீகுமார் என்ற அதிகாரி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர், நேர்மையானவர், நடுநிலை தவறாதவர் என்று பெயரெடுத்தவர்.

 

அவர் இந்த ஆணையத்தில் இடம் பெறுவதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றார் பிரசாந்த் பூஷண்.

 

மூன்றாவது அதிகாரி: அத்துடன் இந்த வழக்கு விசாரணை முறையாகவும் விரிவாகவும் நடப்பதை உறுதி செய்ய இன்னொரு ஆணையரையும் நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்றும் பிரசாந்த் பூஷண் அப்போது கேட்டுக்கொண்டார்.

 

நீதிபதிகளின் கேள்வி: இந்த வழக்கில் விசாரணை எந்தக் கட்டத்தில் இருக்கிறது, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அவ்வப்போது நீதிமன்றம் அறிந்துகொள்வதில் உங்களுக்கு ஆட்சேபம் ஏதும் உண்டா? என்று நீதிபதிகள் இருவரும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களைக் கேட்டனர்.

 

தங்களுக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை என்று கோபால் சுப்ரமணியமும் வேணுகோபாலும் கூறினர்.

 

ஆனால் வெளிநபரையோ, வெளி அமைப்புகளையோ விசாரணைக்குப் பயன்படுத்தக்கூடாது என்று  நிபந்தனை விதித்தார் வேணுகோபால்.

dinamani.com