சுப்ரீம் கோர்ட்டில் ரத்தன் டாடா கோரிக்கை (ஸ்பெக்ட்ரம் விவகாரம் - நீரா ராடியா ரத்தன் டாடா உரையாடல் வெளியீடு)

29/11/2010 15:10


 

 

 நீரா ராடியாவுடன் தொழில் அதிபர் ரத்தன் டாடா டெலிபோனில் பேசிய விவரங்கள் மீடியாவில் வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் என்ற பெயரில் மக்கள் தொடர்பு நிறுவனம் நடத்தி வருபவர் நீரா ராடியா.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் வெளியானதை தொடர்ந்து, இவருக்கும் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் ஆகியோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பற்றிய விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீரா ராடியாவின் நிறுவனம் டாடா குரூப் நிறுவனங்களுக்கும் மக்கள் தொடர்பு சம்பந்தமான பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில், டாடா குரூப் நிறுவனங்களின் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பற்றிய விவரமும் வெளியாகி உள்ளது.


2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை விசாரணை நோக்கத்துக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்து உள்ளனர். அந்த உரையாடலின் பகுதிதான் தற்போது வெளியாகி உள்ளது.


இது தனி மனித உரிமையை மீறிய செயல் என்று ரத்தன் டாடா  கருத்து தெரிவித்திருந்தார்.


மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக ரத்தன் டாடா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு  தொடர்ந்தார்.


அரசியல் சட்டத்தின் 32-வது பிரிவு ஒவ்வொருவரின் வாழும் உரிமையையும், தனிப்பட்ட உரிமைகளையும் பாதுகாக்க வகை செய்கிறது. நீரா ராடியாவுக்கும் தனக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் பகுதி வெளியாகி இருப்பதன் மூலம், தனது தனிப்பட்ட உரிமை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இது தொடர்பாக, அவர்  சுப்ரீம் கோர்ட்டில் இன்று  தாக்கல் செய்த மனுவில், தொலை பேசி உரையாடல்களை மீடியாக்களுக்கு தகவல்களை கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

nakkheeran.in