சென்னையில் ந‌பிக‌ள் நாயகம் (ஸல்) அவர்களின் வ‌ர‌லாற்று நூல் வெளியீடு

10/08/2010 15:47

சென்னை: புக‌ழ்பெற்ற‌ வ‌ர‌லாற்றசிரிய‌ர் இப்னு க‌ஸீர் ( ர‌ஹ் ) அவ‌ர்க‌ள் அர‌பியில் எழுதிய‌ அல்பிதாயா வ‌ந்நிஹாயா நூலின் ஒரு ப‌குதி க‌ஸ‌ஸுல் அன்பியா. சென்னையில் ஆயிஷா ப‌திப்ப‌க‌ம் சார்பாக‌ இதன் த‌மிழாக்க‌த்தின் முத‌ல் பாகமான‌‌ ந‌பிமார்க‌ள் வ‌ர‌லாற்று நூல் வெளியீட்டு விழா கடந்த 6-ம் தேதி மாலை 7 ம‌ணிக்கு தேவ‌நேய‌ப்பாவ‌ாண‌ர் அர‌ங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ர‌ஹ்ம‌த் ப‌திப்ப‌க‌ மேலாய்வாள‌ர் மௌல‌வி ஏ. முஹ‌ம்ம‌து கான் பாஸில் பாக‌வி த‌லைமை தாங்கினார். பி. ஜப‌ருல்லா கான் முன்னிலை வ‌கித்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஹாஃபிழ் எம்.என். புகாரி திருமறை வசனங்களை ஓதினார். அதைத் தொடர்ந்து, ஆயிஷா பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி வரவேற்புரை நிகழ்த்தினார். 

Prophets' history book release
ஆயிஷா பதிப்பக நிறுவனர்களுள் ஒருவரான ஜே. இக்பால் கான் துவக்கவுரையில் தங்கள் பதிப்பகம் ஆரம்பித்ததின் நோக்கம் மறுமையில் வெற்றி பெறுவது மட்டுமே என்று குறிப்பிட்டார்.

மௌலவி அ. முஹம்மது கான் ஃபாஸில் பாகவி தம்முடைய தலைமையுரையில் கூறியதாவது,

ஆயிஷா பதிப்பகத்தார் தொடங்கியுள்ள இப்பணி வெகுவாகப் பாராட்டத்தக்கது. அரபியில் நூற்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கத் தான் தகுந்த ஆட்கள் இல்லை. எனவே, அரபிக் கல்லூரிகள் மொழிபெயர்ப்புக்கென்று தனித்துறை ஒன்றைத் தொடங்க வேண்டும்.

மேலும், இவர்கள் தொடங்கியுள்ள இப்பணியைப்போல் மற்ற செல்வந்தர்களும் பொதுத்தொண்டு ஆற்ற முன்வர வேண்டும். அதற்கு அறிஞர்களும், செல்வந்தர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கூறினார்.

அடுத்து, கவிக்கோ அப்துர் ரஹ்மான் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம்முடைய உரையில் கூறியதாவது,

என் வீட்டில் ஒரு பிரசவம் நடந்ததைப் போன்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது. ஏனென்றால், ஆதாரப்பூர்வமான ஒரு வரலாற்று நூல் தமிழில் வராதா என நான் நெடுங்காலமாக ஏங்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் ஆயிஷா பதிப்பகத்தார் செயல்படுவது பாராட்டுக்குரியது. இந்நூல் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர் கூறினார்.

அவருக்கு பின்னர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர். பேராசிரியர். எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில், இந்நூல் மிகச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. கான் பாகவி கூறியதைப் போல் மொழிபெயர்ப்புக்கென்றே அரபிக் கல்லூரிகளில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். இப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒவ்வொருவரும் பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

அடுத்து டாக்டர் பி.எ. செய்யது மவூத் ஜமாலி நூல் அறிமுக உரை நிகழ்த்தினார். அவர் தம் உரையில், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அல்பிதாயா வந்நிஹாயா எனும் இந்த வரலாற்று நூலை மிக நுட்பமாக ஆராய்ந்துள்ளார். அவர் நூஹ் நபியின் கப்பலைப் பற்றி ஆய்வு செய்து கூறியுள்ள தகவல்களையும் ஜூதி மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நூஹ் நபியின் கப்பலை 1959-ம் ஆண்டு அமெரிக்கத் தொல்லியல் துறை அறிஞர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் அதிசயித்துப் போனேன். இரண்டும் ஒன்றாகவே உள்ளது என்று குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து, மௌலவி, ஏ.எம். முஹம்மது இல்யா ஃபாஸில் பாகவி வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில், ஐரோப்பியர்களும், ஆங்கிலேயர்களும் இஸ்லாமிய வரலாற்றைத் திரித்து எழுதி அதையே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்துப் போதித்துவிட்டனர். இதனால் இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான சிந்தனையே மக்கள் மத்தியில் உள்ளது. மேலும், ஆங்கிலேயர்கள் ஜிஹாத் எனும் அரபி வார்த்தைக்கு போர் என்ற தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமிய மார்க்கம் போரையே வலியுறுத்தும் வன்மையான மார்க்கம் என்ற பொய்யான தோற்றத்தை உண்டாக்கியுள்ளனர். ஆனால், ஜிஹாத் எனும் வார்த்தைக்கு போராட்டம் என்று பொருள். எனவே இதுபோன்ற தவறான செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கிற நாம், நபிமார்களைப் பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், நபிமார்கள் வரலாறு எனும் இந்த நூலை வாங்கிப் படியுங்கள் என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து, மௌலவி, காஞ்சி அப்துல் ரவூப் பாகவியும், டாக்டர் அப்துல்லாஹ்வும் (பெரியார்தாசன்) வாழ்த்துரை வழங்கினர். டாக்டர். அப்துல்லாஹ் தம்முடைய உரையில், இந்நூல் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் இனிய தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நூலை மலிவுப் பதிப்பில் அச்சிட்டு எல்லோரும் வாங்கும் நிலையை உருவாக்க ஆயிஷா பதிப்பகத்தார் ஆவணம் செய்ய வேண்டும். இந்நூல் ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறினார்.

சென்னைப் பல்கலைக்கழக அரபித் துறைத் தலைவர் டாக்டர். பி. நிஸார் அஹ்மத் நூலை வெளியிட்டார். எல்.கே.எஸ். சையித் அஹமத் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் ஆயிஷா பதிப்பகத்தின் நிறுவனர்களுள் ஒருவரான எம். சாதிக் பாட்சா நன்றியுரை வழங்கினார்.

https://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/10-prophets-history-book.html