செப்.11 தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா: அஹமதுநேஜாத் - ஒபாமா கண்டனம்

26/09/2010 16:57

அஹமதினிஜாத் 24-9-2010

வீழ்ச்சியடைந்துவந்து அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் உள்நோக்குடன் அமெரிக்க அரசின் ஒரு பகுதியினரின் சதித்திட்டமே 2001வதஆண்டிலநியூயார்க் இரட்டை கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் என்று ஈரான் அதிபர் அஹமதினிஜாத் குற்றம் சாற்றியுள்ளார்.

ஐ.நா.வின் புத்தாயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு மாநாட்டில் ஈரான் அதிபர் இவ்வாறு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிநடப்பு செய்தன.

“அமெரிக்க பொருளாதாரத்தின் வீ்ழ்ச்சியை தடுத்து நிறுத்தவும், மத்திய கிழக்காசியாவில் ஜியானிஸ்ட் (இஸ்ரேல்) அரசைக் காக்கவும் அந்நாட்டு அரசின் ஒரு பகுதியினரே சதித் திட்டம் தீட்டி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒரு கருத்து உள்ளது” என்று பேசிய அஹமதுநேஜாத், இந்த கருத்தை அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினரும், உலகின் பல நாடுகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஒப்புக் கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாற்றில் உண்மை உள்ளதா என்பதை அறிய விரிவான ஒரு விசாரணையை ஐ.நா.நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஒபாமா : 26-9-2010

பிபிசி ஊடகத்தின் ஈரான் நாட்டுக்கான பார்சி செய்திப் பிரிவுக்கு ஒபாமா அளித்த பேட்டியில், "ஈரான் அதிபரின் கருத்து வெறுக்கத்தக்கது, குற்றத்திற்குரியது, மன்னிக்க முடியாதது" என்று கூறியுள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால், தனது அணுசக்தி திட்டத்தில் சர்வதேச நெறிமுறைகளை ஈரான் கடைபிடித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என்று அந்த பேட்டியில் ஒபாமா மேலும் தெரிவித்துள்ளார்.