சொத்து விவரங்களை அறிவிக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு

14/06/2011 10:23

வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அவர்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார்.

 

அதுபோல் மத்திய அமைச்சர்களின் மனைவி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இந்தத் தகவலை தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சரவைச் செயலாளர் கே.எம். சந்திரசேகர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: மத்திய அமைச்சர்கள் ஆண்டுதோறும் அவர்களது சொத்து விவரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான ஒன்றுதான். அதன் அடிப்படையில் எல்லா அமைச்சர்களும் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜூன் 2-ம் தேதி அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். பிரதமரின் உத்தரவுப்படி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

 

அந்தக் கடிதத்தில் அமைச்சர்கள், அவர்களது மனைவிகள், மற்றும் அமைச்சரைச் சார்ந்தவர்களின் சொத்து விவரமும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும் அமைச்சரும், அவரது மனைவி, அவரைச் சார்ந்தவர்கள் வர்த்தகம் செய்கிறார்களா அல்லது வெளிநாட்டு அரசு அல்லது தனியார் நிறுவனங்களிலோ அல்லது உள்நாட்டில் உள்ள நிறுவனங்களிலோ பணிபுரிகிறார்களா என்று தெரிவிக்க வேண்டும் என கேட்டக் கொள்ளப்பட்டுள்ளனர். நடத்தை விதிமுறை பத்தி 1 (ஏ), 2 (ஏ), 2 (இ), மற்றும் 3.2 ஆகியவற்றின்படி சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் அவர்

 

DINAMANI.COM