ஜித்தாவில் தீவிபத்து 17000 பாஸ்போர்ட்டுகள் எரிந்து நாசம்

19/07/2011 10:28

 

செங்கடல் நகரமான ஜெத்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் சம்பவித்த தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.  இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

 

சவூதி நாடெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளனவாம். குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப் பிரிவகம் செயற்பட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 17 ,000 கடவுச் சீட்டுகள் (Passports) முழுவதும் எரிந்து போய் பல்லாயிரக்கணக்கான அயலக ஊழியர்களின் விடுமுறைக் கனவைப் பொசுக்கி விட்டுள்ளன. இத்தகவலை ஜெத்தாவிலிருந்து வெளியாகும் அரபு நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

 

முறையான பரிகாரங்களை மேற்கொள்ள நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  அனைத்தையும் மீளமையச் செய்ய 75 நாள்களாவது ஆகலாம் என்று அவர் கூறினார்.  நிறுவனம் சார்பாக சட்டத் தரணிகள் குழுவொன்று ஜெத்தாவில் முகாமிட்டு ஆகவேண்டிய  முறைமைகளை மேற்கொண்டு வருகிறதாம்.

வெளிநாட்டுப் பணியாளர்கள் அனைவரும் தத்தம் தூதரகங்களை அணுகி புதிய பாஸ்போர்ட்  பெற்று கொள்ளும்படி   நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக 20 மில்லியன் ரியால்களை அந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளதாம்.

inneram.com