தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்குகள்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்

07/09/2010 10:50

புது தில்லி, செப்.6: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் கட்டாய இடதுஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் தொடுத்த வழக்குகளை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவுள்ளது.

6-14 வயதுடைய அனைவருக்கும் இலவசமாக கல்வி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படை உரிமையாக்கி சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்துள்ளது.

இதற்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களை கட்டாய இடஒதுக்கீடு அளிக்க நிர்பந்தித்துள்ளது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளனர்.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறப்பட்டிருப்பது: மத்திய அரசு இயற்றியுள்ள கல்வி உரிமைச் சட்டத்தின் 3-வது பிரிவு தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த சட்டத்தின் மூலம் அரசின் உதவி பெறாத பள்ளிகளும், சிறுபான்மை பள்ளிகளும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகள் தன்னாட்சியுடன் செயல்பட ஏற்கெனவே சட்டத்தில் வழிவகை உள்ளது. அரசியல் சாசனத்தின் பிரிவு 19 (1) (ஜி), தனியார் பள்ளிகளுக்கு முழுமையான சுதந்திரத்தை அளித்துள்ளது. டிஎம்ஏ பாய் வழக்கில் மத்திய அரசின் தலையீடு இல்லாமல் தனியார் பள்ளிகள் முழு சுதந்திரத்துடன் செயல்படுவதை உச்ச நீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் உறுதி செய்துள்ளது.

நிலைமை இப்படியிருக்க இதைக் கருத்தில் கொள்ளாமல் தனியார் பள்ளிகள் 25 சதவீதம் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என்று நிர்பந்திப்பது நியாயமல்ல. இதை உறுதி செய்து சட்டத்தை இயற்றியுள்ளது தங்களது அடிப்படை உரிமையை மீறுவதுடன், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் தாக்கல் செய்திருந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை திங்கள்கிழமை பரிசீலித்த தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா தலைமையிலான பெஞ்ச், இந்த மனுக்கள் அனைத்தையும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Dinamani