தலிபான்கள் போர் நிறுத்தத்திற்கு தயார்!

11/09/2012 17:22

அல்கொய்தா தொடர்பிலிருந்து விலகி கொள்ளவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளவும் தலிபான்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா அமைப்பினர் தகர்த்ததைத் தொடர்ந்து, அவர்கள் பதுங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது அமெரிக்கா.

இதைத் தொடர்ந்து ஆப்கானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான தலிபானுடன் கடந்த 11 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள தலிபான்கள் தயாராக உள்ளதாக லண்டனில் உள்ள றொயல் யுனைடட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அக்கல்வி நிறுவனத்தினர் தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஒமருக்கு நெருக்கமான 4 மூத்த தலைவர்களுடன் நேர்காணல் செய்ததில் இதுகுறித்து தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நால்வரில் இருவர் முந்தைய தலிபான் ஆட்சியில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தவர்கள் ஆவர்.

இப்போது நடைபெற்று வரும் போரில், எந்தத் தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டதாலேயே தலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தலிபான்களின் இந்த மனமாற்றம் குறித்து அக்கல்வி நிறுவனத்தினரின் ஆய்வில் தெரியவந்த விஷயங்கள் குறித்து தி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின், தனது பெரும்பாலான படையணிகளை 2014ஆம் ஆண்டுக்குள் நேட்டோ திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

அதே சமயம் ஆப்கானின் பாதுகாப்பைக் கருதி, கந்தஹார், ஹெராத், ஜலாலாபாத், மஸர்- இ- ஷெரிப், காபூல் ஆகிய இடங்களில் மட்டும் 2024ஆம் ஆண்டு வரை தங்களது படைத் தளத்தை அமெரிக்கா வைத்துக் கொள்ளலாம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின் அல்கொய்தாவுடனான தொடர்பை விட்டுவிட தலிபான் அமைப்பினர் தயாராக உள்ளனர்.

எனினும் உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கு சில நிபந்தனைகளையும் அவர்கள் விதித்துள்ளனர். போர் நிறுத்தத்துக்கு ஒத்துக் கொள்வதை சரணடைவதாகக் கருதக்கூடாது, ஆயுதங்களைக் கைவிட மாட்டோம், ஊழல்வாதியான ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் உடன் பேச்சு நடத்த மாட்டோம், ஆப்கான் மண்ணிலிருது ஈரான் மற்றும் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தக் கூடாது, தலிபான் அமைப்புக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் தர வேண்டும், இப்போதுள்ள ஆப்கான் அரசியல் சாசன சட்டத்தை ஏற்க மாட்டோம் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தலிபான்கள் பேச்சுவார்த்தைக்கு வர முன்வந்துள்ளதையும், போர் நிறுத்தம் செய்ய விரும்புவதையும், ஜனாதிபதி ஹமீது ஹர்சாய் அமைத்த உயர் அமைதி கவுன்சிலின் துணைத் தலைவர் அப்துல் ஹக்கீம் முஜாஹித் உறுதிப்படுத்தியுள்ளார்.

newsonews.com