பதவி விலகினார் முதல்வர் ரோசய்யா! ஆந்திராவில் பரபரப்பு!

24/11/2010 12:42

முதல்வர் பதவியில் இருந்து ரோசய்யா இன்று பதவி விலகுகிறார். இதற்கான கடிதத்தை ஆந்திர மாநில கவர்னரிடம் ரோசய்யா இன்று மாலை வழங்குகிறார். 
 
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான சாக்ஷி என்ற தெலுங்கு செய்தி சேனலில், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை விமர்சிக்கும் நிகழ்ச்சி, ஒளிபரப்பானது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரசார், அந்த டி.வி. அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் நடத்தினர்.


இதுகுறித்து, முதல்வர் ரோசய்யாவிடமும், மாநில காங்கிரஸ் கமிட்டியிடமும் டெல்லி மேலிடம் அறிக்கை கேட்டது. இதையடுத்து ஆந்திர முதல்வர் ரோசய்யா டெல்லி சென்றார். காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.


இந்நிலையில் முதல்வர் பதவியில் இருந்து ரோசய்யா இன்று பதவி விலகுவதாகவும், இதற்கான கடிதத்தை ஆந்திர மாநில கவர்னரிடம் ரோசய்யா இன்று மாலை வழங்குவதாகவும் ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

nakkheeran.in